தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் கிராம மக்கள் மனு
தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் தூத்துக்குடியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தன
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஏராளமான மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேது தலைமையில் தொழிலாளர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கட்டிட தொழிலாளர்களுக்கு நலவாரிய நலத்திட்ட உதவிகளை விண்ணப்பித்து 30 நாட்களில் வழங்க வேண்டும். விபத்து எங்கு நடந்தாலும், அதனால் எப்போது மரணம் ஏற்பட்டாலும் இழப்பீடு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். பதிவு செய்து, பதிவு ஆவணப்படி 60 வயது பூர்த்தியடைந்தால், எந்தவித நிபந்தனையும் இன்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். திருமண உதவித்தொகை ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.
கயத்தாறு தாலுகா இளவேலங்கால் பஞ்சாயத்து தெற்கு காலனி தெருவை சேர்ந்த மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:–
நாங்கள் இளவேலங்காலில் ஆதிதிராவிட நலத்துறையால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலனி தொகுப்பு வீடுகளில் சுமார் 36 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஒரு தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். ஆகையால் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சிறுவர் விளையாட்டு மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.
கருங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பவுலாமேரி என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர் ஏழை, எளிய மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரை திடீரென ஆழ்வார்திருநகரிக்கு இடமாற்றம் செய்து உள்ளனர். நல்ல முறையில் பணியாற்றி வந்த பவுலாமேரியை மீண்டும் கருங்குளத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் செண்பகராஜ், மண்டல தலைவர் மனோகர் ஆகியோர் தலைமையில் அந்த பகுதி மக்கள் நேற்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட நமச்சிவாயபுரம் கிராமத்தில் பல தலைமுறைகளாக 20 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் மீது அந்த பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினர் தீண்டாமை கொடுமையை கடைபிடிக்கின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மளவராயநத்தம் வடக்கூர் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் மளவராயநத்தம் வடக்கூரில் வசித்து வருகிறோம். எங்கள் கிராம மக்கள் அனைவரும் தற்போது வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.