ரூ.550 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கிய விவகாரம்; பா.ஜனதா பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை


ரூ.550 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கிய விவகாரம்; பா.ஜனதா பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 31 July 2018 5:15 AM IST (Updated: 31 July 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

ரூ.550 கோடி சொத்து ஆவணங்கள் விவகாரம் தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு கிளப்பில் சிக்கிய ரூ.550 கோடி சொத்து ஆவணங்கள் விவகாரம் தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் உள்ள பவுரிங் இன்ஸ்டிடியூட் ‘கிளப்‘பில் உள்ள லாக்கர்களில் தொழில்அதிபர் அவினாஸ் அமர்லால் பதுக்கி வைத்திருந்த ரூ.550 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் ரூ.11¾ கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், பணம் சிக்கியது. அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

தொழில்அதிபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும், நில அபகரிப்பில் ஈடுபட்டும் அவினாஸ் அமர்லால் சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு கோரமங்களாவில் வசிக்கும் பா.ஜனதா கட்சியின் பிரமுகரான பிரசாத் ரெட்டியின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 8 அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தார்கள். காலையில் தொடங்கிய சோதனை நேற்று இரவு வரை நீடித்தது. சோதனையின் போது பிரசாத் ரெட்டியின் வீட்டில் முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் சிக்கியதாகவும், அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் தொழில்அதிபர் அவினாஸ் அமர்லாலுடன் பிரசாத் ரெட்டிக்கு தொடர்பு இருந்ததும், அத்துடன் கிளப்பில் உள்ள லாக்கர்களில் சிக்கிய சொத்து ஆவணங்களுக்கும் பிரசாத் ரெட்டிக்கும் சம்பந்தம் இருந்ததாலும், அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன. அதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பா.ஜனதா பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story