தொடர் கனமழையால் நிரம்பும் தருவாயில் உள்ள பத்ரா அணையில் எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு பூஜை
தொடர் கனமழையால் நிரம்பும் தருவாயில் உள்ள பத்ரா அணையில் முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான சாமனூர் சிவசங்கரப்பா, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சங்கமேஷ்வர், ராமப்பா ஆகியோர் சிறப்பு பூஜை செய
பத்ராவதி,
தொடர் கனமழையால் நிரம்பும் தருவாயில் உள்ள பத்ரா அணையில் முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான சாமனூர் சிவசங்கரப்பா, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சங்கமேஷ்வர், ராமப்பா ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர்.
கர்நாடகத்தில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. அதேபோல் பத்ரா அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் இவ்வாண்டு பத்ரா அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்ரா அணைக்கு முன்னாள் மந்திரி சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ. வந்தார்.
பின்னர் அவர் படகில் அணைக்கட்டின் நீர்த்தேக்கப்பகுதிக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார். மேலும் பூஜைக்கு பின்னர் திவ்ய, திரவிய பொருட்களையும் தண்ணீரில் வீசி வரவேற்றார். பின்னர் மீண்டும் கரை திரும்பிய அவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. அதனால்தான் ஜூலை மாதத்திலேயே பத்ரா அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதன்மூலம் தாவணகெரே மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ள விவசாயி வரையில் பயன்பெற முடியும். கடந்த 5 ஆண்டுகளாக மழையின்றி பத்ரா அணைக்கு நீர்வரத்து பெருமளவு குறைந்திருந்தது.
அணை நிரம்பாமல் இருந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பெரும் துன்பத்தை அனுபவித்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. இதன்பயனாக மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பத்ரா அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களிலும் இதேபோல் மழை பெய்ய வேண்டும். நல்ல மழை பெய்து பத்ரா அணை நிரம்ப வேண்டும். பத்ரா அணையை நம்பி உள்ள விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும். எப்போதும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று இயற்கை அன்னையை நான் வேண்டிக் கொள்கிறேன்.
இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கர்நாடக சட்டசபையில் 3 முறை எம்.எல்.ஏ.வாக அடியெடுத்து வைத்துள்ள பி.கே.சங்கமேஷ்வருக்கு, மந்திரி பதவி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்தை கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் தற்போது கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் எந்தவொரு இடையூறும் இல்லாமல் அனைவரும் ஆட்சி நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சங்கமேஷ்வர், ராமப்பா ஆகியோர் பத்ரா அணையில் பூஜை செய்தனர். இதில், அணையில் பூஜை செய்த பின்னர் பி.கே.சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–
நான் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கும்போதெல்லாம் கனமழை பெய்து பத்ரா அணை நிரம்புவதை காண முடிகிறது. நான் மந்திரி பதவிக்காக யாரிடமும் சென்று சிபாரிசு செய்யும்படி கேட்கவில்லை. கட்சி மேலிடத்திடம் மட்டும் மந்திரி பதவி கோரி விண்ணப்பித்து இருக்கிறேன். அதனால் எனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பி.கே.சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. கூறினார்.
அதையடுத்து ராமப்பா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
விவசாயிகள் நலமுடன் வாழ்ந்தால்தான் மக்கள் நன்றாக வாழ முடியும். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து பத்ரா அணை நிரம்பி உள்ளது. அணை நிரம்பி உள்ளதால் விவசாயிகளின் துன்பம் சற்று நீங்கி இருக்கிறது. அணையின் நீர் பங்கீட்டை அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டும். மேலும் கடைமடை விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்ரா அணையின் முன்பு சர்.எம்.விசுவேஸ்வரய்யாவின் உருவச்சிலையை நிறுவ வேண்டும். இவ்வாறு ராமப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் நாகராஜ், நகரசபை கமிஷனர் ஹரீஷ், சிவமொக்கா புறநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் நாயக், அரிசிகெரே எலநாடு மடத்தின் மடாதிபதி சித்தராமேஷ்வரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.