பவானியில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் கதி என்ன? இருள் சூழ்ந்ததால் தேடும் பணி பாதிப்பு
பவானி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் கதி என்ன? என்று தெரியவில்லை. இருள் சூழ்ந்துவிட்டதால் தேடும் பணி பாதிக்கப்பட்டது.
பவானி,
திருச்சியை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி சுகந்தி என்கிற மீனாட்சி. இவர்களுடைய மகன் தீனதயாளன் (வயது 15). இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மாரிமுத்துவும், சுகந்தியும் கடந்த 2 மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள். இதனால் ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்து வரும் சுகந்தியின் தங்கை சுந்தரி தீனதயாளனையும், அவனுடைய தங்கையையும் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார். இறந்துபோன பெற்றோர் ஞாபகத்திலேயே தீனதயாளன் இருந்ததால், அவனை பவானியில் உள்ள ஒரு எலெக்ட்ரிக் கடையில் சுந்தரி வேலைக்கு சேர்த்துவிட்டார்.
சிலநாட்கள் வேலைக்கு சென்ற தீனதயாளன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் பெற்றோரை நினைத்தபடியே இருந்தான். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் வீட்டில் இருந்த தீனதயாளனை சித்தி சுந்தரி, ‘குளித்துவிட்டு வேலைக்கு செல்‘ என்று கூறியுள்ளார். அதனால் பவானி பழைய பஸ்நிலையம் அருகே செல்லும் காவிரி ஆற்று படித்துறைக்கு குளிக்க சென்றான்.
ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றுகொண்டு இருந்தது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தீனதயாளனை தண்ணீர் இழுத்து சென்றது. அவன் நீந்தி கரைக்கு வர முயன்றான். ஆனால் முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கினான். குளித்துக்கொண்டு இருந்த சிலர் அதை பார்த்து உடனே பவானி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்கள்.
அதன்பேரில் விரைந்து வந்த பவானி தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் ரப்பர் படகு மற்றும் பரிசல்கள் மூலம் ஆற்றுக்குள் தீனதயாளனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7.30 மணி வரை தேடினார்கள். அதன்பின்னர் இருள் சூழ்ந்துவிட்டதால் தேடும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தீனதயாளனின் கதி என்ன? என்று தெரியவில்லை.
இன்று (செவ்வாய்கிழமை) ஆற்றில் மீண்டும் தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தார்கள்.
2 மாதத்துக்கு முன் பெற்றோரை இழந்து சித்தி வீட்டில் வசிக்க வந்த சிறுவனை, காவிரி தண்ணீர் இழுத்து சென்றது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.