மதுரையில் மூடை, மூடையாக குட்கா போதைப்பொருள் பறிமுதல் 2 பேர் சிக்கினர்
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 163 குட்கா மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
மதுரை,
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ளது சுந்தரராஜன்பட்டி. இங்குள்ள ஒரு குடோனில் கடந்த சில மாதங்களாக நூற்றுக்கணக்கான மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு, அதை அவ்வப்போது சிலர் ரகசியமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியினர் போலீசில் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அப்பன்திருப்பதி போலீசார் குடோனை சில நாட்களாக கண்காணித்து வந்தனர். அப்போது குடோனுக்கு சிலர் ரகசியமாக சென்று வருவதை அறிந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த குடோனில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு 2 பேர் இருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் ரவீந்திரன் (வயது 36), முத்துப்பாண்டி (40) என்பது தெரியவந்தது. அங்கிருந்த 163 மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை ஒவ்வொன்றும் 15 கிலோ முதல் 20 கிலோ வரை இருந்தன. அதில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் இருந்தன.
முதல்கட்ட விசாரணையில், குடோனில் குட்கா மூடைகளை பதுக்கி வைத்து அவற்றை மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்து வந்ததாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடோன் உரிமையாளர் யார், குட்கா பதுக்கலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல மதுரை விளாங்குடி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,400 கிலோ குட்கா போதைப்பொருளை கடந்த மாதம் போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கும்பலுக்கும் நேற்று கைதானவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.