உசிலம்பட்டி அருகே கண்மாயில் மண் சரிந்து வாலிபர் பலி; 2 பேர் காயம்
உசிலம்பட்டி அருகே கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளிய போது, மண் சரிந்து வாலிபர் பலியானார். இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ளது குருவிளாம்பட்டி. இந்த ஊரில் உள்ள கண்மாயில் அரசு அனுமதியின்றி சிலர் மண் அள்ளிவருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அயோத்திபட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் செல்வம் (வயது 25), சின்னக்கருப்பன் மகன் பாண்டி (30), சுப்பையா மகன் நேரு என்ற ஆறுமுகம்(55) ஆகியோர் ஒரே இடத்தில் ஏற்கனவே தோண்டி பெரிய பள்ளமான இடத்தில் மண்ணை குடைந்து அள்ளிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மேல் பகுதியில் உள்ள மண் மற்றும் கற்கள் சரிந்து மண் அள்ளியவர்கள் மீது விழுந்தது. இதில் செல்வத்தின் மீது மண் விழுந்து அமுக்கியதில் அதன் இடிபாடுகளில் சிக்கி செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பாண்டி, நேரு, ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவலறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் செல்வம் உடலை மீட்டனர். இதுகுறித்து உசிலம்பட்டி யூனியன் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறும்போது, குருவிளாம்பட்டி கண்மாய் யூனியனுக்கு சொந்தமானது. இங்கு மண் அள்ளுவதற்கு பலியான செல்வம் உள்பட யாரும் அனுமதி பெறவில்லை என்று கூறினார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாண்டி, நேரு ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.