குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே குட்டியுடன் வாகனங்களை மறித்த காட்டு யானை
குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே குட்டியுடன் வாகனங்களை மறித்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குஞ்சப்பனை, மாமரம், செம்மனாரை, கீழ் கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இங்குள்ள மரங்களில் உள்ள பலாப்பழங்களை தின்பதற்காக சமமெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக வந்து முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் அருகில் உள்ள கோத்தகிரி– மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. மேலும் அடிக்கடி நடுரோட்டில் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த சாலையில் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகலிலும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கோத்தகிரி– மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே நேற்று காலை 6 மணியளவில் குட்டியுடன் வந்த காட்டு யானை நடுரோட்டில் வாகனங்களை மறித்தவாறு நின்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதில் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி, முகப்பு விளக்கை அணைத்து காத்திருந்தனர். பின்னர் 30 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து அருகிலுள்ள தோட்டத்திற்குள் குட்டியுடன் காட்டுயானை சென்றது. அதன்பின்னரே அந்த வழியாக போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பலாப்பழ சீசனையொட்டி குஞ்சப்பனை, மாமரம், தட்டப்பள்ளம் உள்ளிட்ட கிராம பகுதியிலும், மேட்டுப்பாளையம் சாலையிலும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக சாலையில் காட்டு யானைகளை பார்த்தால், ஒலி எழுப்புவதை தவிர்ப்பது நல்லது என்றனர்.