சொத்துவரி உயர்வை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சொத்துவரி உயர்வை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 July 2018 4:15 AM IST (Updated: 31 July 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

சொத்துவரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பபெற கோரியும், கறம்பக்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சீனிக்கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் ராமதாஸ், நாராயணன், ராமையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி உயர்வை திரும்பபெறக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது.

இதேபோல் கறம்பக்குடியில் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சொத்துவரி உயர்வை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அன்னவாசல் நகர செயலாளர் முகமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாநில குழு உறுப்பினர் தர்மராஜன் தொடங்கி வைத்து பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன், கட்சி நிர்வாகிகள் அப்துல் ரகுமான், சின்னப்பொண்ணு, மீராமொய்தீன், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாகி சோமையா நன்றி கூறினார்.

புதுக்கோட்டையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஸலாஹுதீன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாநில பேச்சாளர் ஹஸ்ஸான் இமாம், மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாததுரை ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைள் குறித்து கண்டன உரையாற்றினார்கள். தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக சொத்து வரி உயர்வை திரும்பபெற வலியுறுத்தியும் மற்றும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story