சர்வதேச குத்துச்சண்டை போட்டி: திருச்சி வீரர்கள் தங்கம் வென்று சாதனை உற்சாக வரவேற்பு


சர்வதேச குத்துச்சண்டை போட்டி: திருச்சி வீரர்கள் தங்கம் வென்று சாதனை உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 31 July 2018 4:15 AM IST (Updated: 31 July 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் திருச்சி வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி,

வங்காளதேசத்தில் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 24-ந் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். அவற்றில் தமிழக அணி சார்பில் மட்டும் 45 வீரர்கள் பங்கேற்றார்கள்.

இந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற 18 பேர் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர். அவர்களில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3 பேர் தங்கப்பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான கேடயத்தையும் பெற்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

திருச்சி அருகே உள்ள துவாக்குடிமலை காமராஜ் தெருவை சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் அரவிந்தபிரகாஷ். இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் முதல் இடத்தை பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அதுபோல மான்போர்ட் பள்ளியில் பிளஸ்-2 படித்துவரும் மாணவர் பிரசன்னா, திருச்சி காட்டூரில் உள்ள சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் ரிச்சர்டு பார்ட் ஆகியோரும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கல்லூரி மாணவர் அரவிந்தபிரகாஷ் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவிலும், மாணவர் பிரசன்னா 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், ரிச்சர்டு பார்ட் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று முதல் இடத்தை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த 3 பேரும் திருச்சி திரும்பினர். அவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள், போட்டியில் பங்கேற்க நிதிஉதவி அளித்தவர்கள் சார்பில் திருச்சியில் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அரவிந்தபிரகாஷ் கூறியதாவது:-

நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அப்பா திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்க்கிறார். தாயார் இல்லத்தரசி. பள்ளி பருவத்தில் இருந்தே குத்துச்சண்டை போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பங்கேற்று பலமுறை வெற்றிபெற்று பரிசுகள் பெற்றுள்ளேன்.

இதுபோன்ற சர்வதேச போட்டியில் பங்கேற்க பயணச்செலவுக்காக மிகவும் சிரமப்பட்டேன். குடும்ப சூழ்நிலையால் என்னால் வங்காளதேசம் சென்று விளையாட முடியுமா? என்ற தயக்கம் இருந்தது. அரசு தரப்பிலும் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அதேவேளையில் நண்பர்கள், பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் சாரதாஸ் நிறுவனத்தினர் எனக்கு ஊக்கம் அளித்து நிதி உதவி செய்தனர். இதற்காக அவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story