வாங்கல் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


வாங்கல் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 July 2018 4:15 AM IST (Updated: 31 July 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகேயுள்ள வாங்கல் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் அருகே சோமூர் ஊராட்சிக்கு உட்பட்ட அச்சமாபுரம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊரின் ஒற்றுமைக்காக பொங்கல் விளையாட்டு போட்டி, வாலிபால் போட்டி, கோவில் விழாக்கள் உள்ளிட்டவற்றை நடத்தும்போது ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் மட்டும் ஒத்துபோகாமல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இது பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. மேலும் அந்த நபர்களிடம் கோவில் விழா நடத்துதல் உள்ளிட்டவை தொடர்பான பொறுப்பை ஒப்படைத்தால் அதிலும் குளறுபடிசெய்கின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் ஊர் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்கும் ஒத்துழைக்காமல் அந்த குறிப்பிட்ட நபர்கள் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அங்குள்ள போலீசாரிடம் ஊரில் அடிக்கடி பிரச்சினை செய்து வரும் அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஊர் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழ்வதற்கு முன்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த நபர்கள் மீது புகார் அளித்தனர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்தை நடத்தி கிராம மக்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story