வைகை ஆற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
வைகை ஆற்றில் அழுகிய நிலையில் வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அல்லிநகரம்,
தேனி அருகே உள்ள சின்னதேவன்பட்டி வைகை ஆற்றில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கும், தேனி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர்.
இதேபோல் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் அவர்கள், டியூப் மூலம் ஆற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து வாலிபரின் உடலை, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்டாரா? அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.