பாலியல் தொல்லை: வாலிபரை போலீசில் சிக்க வைத்த மாணவியின் தந்தை
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி வரவழைத்து, பெண்ணின் தந்தை போலீசில் சிக்க வைத்த சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
மும்பை,
மும்பை சாக்கிநாக்கா பகுதியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ணா(31) என்ற வாலிபர் ‘பேஸ்புக்’ மூலம் அறிமுகம் ஆனார். கல்லூரி மாணவி வாலிபருடன் நட்பாக பழகி வந்தார். இந்தநிலையில் அந்த வாலிபர் மாணவியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினார். ஆனால் மாணவி அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் கல்லூரி மாணவியின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பினார். மேலும் அவர் மாணவிக்கு ஆபாசமான படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். மேலும் மாணவியின் தந்தை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசில் பிடித்து கொடுக்க திட்டம்போட்டார். இதையடுத்து அவர் கிருஷ்ணாவிற்கு போன் செய்து, இந்திப்பட தயாரிப்பாளர் போல பேசினார். அவர் மும்பை வந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கிருஷ்ணாவிடம் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பிய கிருஷ்ணா சினிமாவில் நடிக்கப்போவதாக உள்ளூர் நண்பர்களிடம் கூறிவிட்டு, மும்பை வந்தார். வாலிபர் வருவது குறித்து மாணவியின் தந்தை போலீசாருக்கு ஏற்கனவே தகவல் கொடுத்து இருந்தார்.
இந்தநிலையில் மும்பை, அந்தேரி வந்த கிருஷ்ணாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story