போலீஸ் அலுவலகத்துக்கு ஒதுக்க திட்டமிட்டிருந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டுக்கு ‘சீல்’


போலீஸ் அலுவலகத்துக்கு ஒதுக்க திட்டமிட்டிருந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 1 Aug 2018 4:30 AM IST (Updated: 31 July 2018 10:23 PM IST)
t-max-icont-min-icon

கியூ பிராஞ்ச் போலீஸ் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளுக்காக ஒதுக்க திட்டமிட்டிருந்த புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து தொழிலதிபர் கட்டியிருந்த வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கணியாகுளம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 47). தொழிலதிபரான இவர், அந்த பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வந்தார். இதற்கிடையே கியூ பிராஞ்ச் போலீசார் தங்களது அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்ட நிலம் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாவட்ட நிர்வாகம் நாகர்கோவில் பார்வதிபுரத்தை அடுத்த கணியாகுளம் பகுதியில் வருவாய்த்துறைக்கு உட்பட்ட தரிசு புறம்போக்கான 27½ சென்ட் நிலத்தை ஒதுக்கியது.

ஆனால் அந்த இடத்தில் பாஸ்கரின் வீடு மற்றும் அதனைச்சுற்றியுள்ள நிலமும் இருந்தது. இதையடுத்து அகஸ்தீஸ்வரம் தாசில்தார், பாஸ்கருக்கு நோட்டீசு வழங்கி, வீட்டை காலி செய்யுமாறு கூறியிருந்தார். இதையடுத்து பாஸ்கர் கலெக்டருக்கு மேல்முறையீடு செய்தார். ஆனால் கலெக்டர், தாசில்தார் நடவடிக்கை எடுத்து நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் தாசில்தார் சார்பில் கடந்த மாதம் 10–ந் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. 17–ந் தேதிக்குள் வீட்டை காலி செய்யுமாறு கால அவகாசமும் வழங்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.


தாசில்தாரின் நோட்டீசை எதிர்த்து பாஸ்கர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சஜித், துணை தாசில்தார் வினைதீர்த்தான், சர்வேயர் அஜ்மல்கான், கிராம நிர்வாக அலுவலகர்கள் மணிகண்டன், நாகேஸ்வரகாந்த், பீட்டர், நாகலிங்கம், சிவசங்கரன் ஆகியோர் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த பாஸ்கரின் வீட்டை பூட்டி ‘சீல்’ வைப்பதற்காக நேற்று காலையில் அப்பகுதிக்கு சென்றனர்.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 அப்போது அங்கிருந்த பாஸ்கர், “தான் வீடு கட்டியுள்ள இடம் முறைப்படி விலைக்கு வாங்கி பத்திரப்பதிவு செய்திருப்பதாகவும், அரசு நிலமாக இருந்தால் எப்படி பத்திரப்பதிவு செய்ய முடியும்? என்றும், ஆண்டுக்கணக்கில் வசித்து வரும் தன்னை திடீரென காலி செய்ய சொன்னால் எப்படி?“ என்றும் கேட்டு தாசில்தார் சஜித் காலில் விழுந்து கதறினார்.

ஆனாலும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புறம்போக்கு நிலத்தில் கட்டியிருந்த வீட்டை ‘சீல்’ வைக்கும் முடிவை கைவிடவில்லை. இதையடுத்து பாஸ்கர் தற்போது மழை பெய்து வருவதால் தனது வீட்டை காலி செய்ய தனக்கு 1 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டார். ஏற்கனவே நாங்கள் அதிகமாக காலக்கெடு கொடுத்து விட்டோம், எனவே காலஅவகாசம் அளிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


 இதனால் பாஸ்கர் மற்றும் அவரை சேர்ந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை மணிக்கணக்கில் நடந்தது.

பேச்சுவார்த்தையில் ‘சீல்’ வைக்கப்படும் வீட்டில் இருந்து வெளியே எடுத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் அங்கு வளர்க்கப்படும் மாடுகளை எடுத்து செல்ல ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பாஸ்கரின் வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனர். வீட்டுக்குள் இருந்த பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டது.

சுற்றுச்சுவர் இரும்பு கேட்டையும் பூட்டி அந்த இடம் முழுவதையும் அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நடவடிக்கையின்போது நேற்று மதியம் மழை பெய்து கொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் வீட்டை பூட்டி ‘சீல்’ வைக்கும் பணியை மேற்கொண்டனர்.

Next Story