காட்டுயானையை விரட்ட தேவாரத்துக்கு வந்த மற்றொரு கும்கி யானை


காட்டுயானையை விரட்ட தேவாரத்துக்கு வந்த மற்றொரு கும்கி யானை
x
தினத்தந்தி 1 Aug 2018 3:15 AM IST (Updated: 31 July 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

தேவாரம் வனப்பகுதியில் 7 பேரை கொன்ற காட்டு யானையை விரட்ட தேவாரத்துக்கு மற்றொரு கும்கி யானை நேற்று வந்தது. வனப்பகுதிக்குள் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) கும்கி யானைகளை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேவாரம்,



தேனி மாவட்டம் தேவாரம் வனப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக சுற்றித்திரியும் ஒரு காட்டுயானை, இதுவரை 7 பேரின் உயிரை குடித்துள்ளது. பல ஏக்கர் பரப்பளவு விவசாய பயிர்களை சேதப்படுத்தி இருக்கிறது. இந்த காட்டு யானையை, கும்கி யானைகள் மூலம் விரட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி கோவை மாவட்டம் டாப்சிலிப் வனத்துறையினரிடம் இருந்து கலீம் என்ற கும்கி யானை நேற்று முன்தினம் தேவாரம் வந்தது. இந்தநிலையில் மாரியப்பன் என்ற கும்கி யானை லாரி மூலம் நேற்று தேவாரத்துக்கு வந்து சேர்ந்தது. கலீம் யானைக்கு 52 வயது ஆகிறது. மாரியப்பன் என்ற யானைக்கு வயது 30 ஆகும்.

மாரியப்பன் என்ற கும்கி யானை சுமார் 9 அடி உயரம் உள்ளது. லாரி மூலம் இந்த யானையை தேவாரத்தில் ஊருக்குள் கொண்டு வரும் போது மின்சார வயர்கள் மீது உரசும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

அதன்பின்பு லாரி மூலம் யானையை ஊருக்குள் கொண்டு வந்தனர். பின்னர் ஏற்கனவே கலீம் கும்கி யானை தங்க வைக்கப்பட்டுள்ள தனியார் தென்னந்தோப்பில் மாரியப்பன் கும்கி யானையும் இறக்கி விடப்பட்டது. அங்கு யானைகளுக்கு தேவையான சோளதட்டை, தென்னை ஓலைகள், கத்திரிக்காய், மூங்கில் இலைகள் மற்றும் சாப்பாட்டு உருண்டை ஆகியவற்றை வனத்துறையினர் கொடுத்து வருகின்றனர்.

மேலும் அந்த தோப்பில் யானைகளுக்கு உணவு தயாரிக்க தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கும்கி யானைகளுடன் வந்துள்ள யானை பாகன் மற்றும் வனத்துறையினருக்கு தனி கூடாரம் அமைத்து தோட்டத்தில் உணவு தயாரிக்கப்படுகிறது.

காட்டுயானை செல்லும் வழித்தடங்களை நன்கு அறிந்த வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முதல் வன பகுதிக்குள் சென்று காட்டுயானையின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, காட்டுயானையை விரட்ட வந்துள்ள 2 கும்கி யானைகளும் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. முதற்கட்டமாக, அட்டகாசம் செய்து வரும் காட்டுயானை அடர்ந்த வனபகுதிக்குள் விரட்டப்படும். பின்னர் சுமார் 20 நாட்கள் இங்கு இருந்து கொண்டு யானை மீண்டும் விளைநிலங்களுக்குள் வருகிறதா? என்பது கண்காணிக்கப்படும். மீண்டும் யானை விளைநிலங்களுக்குள் வந்தால் காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என்றனர். 

Next Story