விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்த 6 மாணவர்கள்
திருப்பூரில், குளிர்பானப்பொடி என நினைத்து விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்த 6 மாணவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்,
திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது வகுப்பறை அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது வகுப்பறை அருகே பொட்டலம் ஒன்று கிடந்துள்ளது. அந்த பொட்டலத்தை மாணவர் ஒருவர் எடுத்து வந்துள்ளார். பின்னர் அந்த பொட்டலத்தை அவர்கள் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அந்த பொட்டலத்திற்குள் மஞ்சள் நிறத்தில் பொடி இருந்துள்ளது. அது குளிர்பானப்பொடி என நினைத்த மாணவர்கள் 6 பேரும் அதனை தண்ணீரில் கலந்தனர். பின்னர் அந்த தண்ணீரை 6 பேரும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்துள்ளனர்.
இதனால் சிறிது நேரத்தில் அவர்கள் 6 பேருக்கும் திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்ததும் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஆம்புலன்சில் 6 மாணவர்களையும் ஏற்றி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் அளித்த சிகிச்சைக்கு பிறகு தான் மாணவர்கள் குடித்தது குளிர்பானப்பொடி அல்ல என்றும், அது சாணிபவுடர் (விஷம்) என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பதறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசாரும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் குளிர்பானப்பொடி என நினைத்து தண்ணீரில் கலந்து குடித்ததாக தெரிவித்தனர். மேலும், சிலர் இதனை கலந்துகொடுத்த மாணவர் அதனை குடிக்கவில்லை எனவும் மாறுபட்ட பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் பள்ளிக்கு சாணிபவுடரை கொண்டு வந்தது யார்?, என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்களிடமும் அவர்களது பெற்றோர்கள் இது குறித்து விசாரித்து வருகிறார்கள். எனவே சிகிச்சை முடிந்த பிறகு மாணவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் இது குறித்து தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story