புதுவை சட்டசபையில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி: சட்டசபை செயலாளர் அழைப்பு கடிதம் அனுப்பினார்


புதுவை சட்டசபையில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி: சட்டசபை செயலாளர் அழைப்பு கடிதம் அனுப்பினார்
x
தினத்தந்தி 1 Aug 2018 5:00 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக இன்று கூட்டப்பட்டுள்ள சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்து சட்டசபை செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.

புதுச்சேரி,

நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக புதுச்சேரி சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

புதுவை மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் ஒப்புதலுடன் மேலும் 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து கொள்ளலாம். இதுவரை இந்த நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் மாநில அரசின் பரிந்துரை இன்றி பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சட்டசபைக்கு வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்தார்.

இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பிற்கு தடை விதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து கடந்த 16-ந் தேதி நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சட்டசபைக்கு சென்றனர். அப்போது சபை காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் சட்டசபை வளாகத்திற்குள் நுழைய முடியாதபடி நுழைவாயிலை பூட்டு போட்டு பூட்டினர். இதனால் அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் சபாநாயகர் மீது சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே கடந்த 19-ந் தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட்டு தடை ஏதும் பிறப்பிக்க வில்லை. எனவே நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே நிதி ஒதுக்க மசோதாவிற்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்காததை தொடர்ந்து சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே ஒத்தி வைக்கப்பட்டது.

நிதி ஒதுக்க மசோதாவுக்கு சட்டசபையில் ஒப்புதல் பெறாத நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அரசு துறைகளுக்கான செலவினங் களுக்கு நிதி ஒதுக்குவதில் பிரச்சினைக்குள்ளானது. இந்த நிலையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்ட சபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து நிதி ஒதுக்க மசோதா தாக்கல் செய்ய கவர்னர் அனுமதி வழங்கினார்.

நிதி ஒதுக்க மசோதா விவகாரத்தால் அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி அவசரமாக ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அரசுத் துறைகளில் மற்ற செலவினங்களுக்காக இருந்த நிதியை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நாராயணசாமி நடவடிக்கை எடுத்தார். இதன் எதிரொலியாக நேற்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் நிதி ஒதுக்க மசோதாவை நிறைவேற்றும் விதமாக புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் வெளியிட்டுள்ளார்.

நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குகள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து கவர்னர் கிரண்பெடி நிதி ஒதுக்க மசோதா தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார். அவரது நிபந்தனைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்ட சபைக்குள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்தது.

இந்தநிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களான பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோருக்கு சட்டமன்ற செயலாளர் வின்சென்ட்ராயர் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘உச்சநீதிமன்றத்தின் எதிர்பார்ப்புக்கிணங்க இந்த கூட்ட தொடரில் பங்கேற்க அழைக்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நியமன எம்.எல்.ஏ.க்களான பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 பேரும் இன்று சட்டசபைக்கு வர உள்ளனர்.

Next Story