தாழை மரங்களுக்கு நடுவில் பராமரிப்பின்றி உள்ள தேவதீர்த்த கிணற்றில் புனரமைப்பு பணிகள் தொடங்க முடிவு பக்தர்கள் மகிழ்ச்சி


தாழை மரங்களுக்கு நடுவில் பராமரிப்பின்றி உள்ள தேவதீர்த்த கிணற்றில் புனரமைப்பு பணிகள் தொடங்க முடிவு பக்தர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Aug 2018 3:30 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

தாழை மரங்களுக்கு நடுவில் பராமரிப்பில்லாமல் இருந்த பழமையான தேவதீர்த்த கிணற்றில் புனரமைப்பு பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமாக ராமேசுவரம் கோவில் உள்பகுதி வெளிப்பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் 108 தீர்த்த கிணறுகள் உள்ளன. இதில் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி செல்கின்றனர். கோவிலுக்கு வெளியே ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல ஊர்களில் தீர்த்த கிணறுகள் உள்ளன. அவை பராமரிப்பு இல்லாமலும், சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்தும் சில தீர்த்த கிணறுகள் மணலால் மூடிய நிலையிலும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் பிரசித்தி பெற்ற நம்புநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்பகுதியில் தேவ என்ற பெயரில் ஒரு தீர்த்த கிணறு பல ஆண்டுகளாக தாழை மரங்களுக்கு நடுவில் மறைந்த நிலையில் இருந்து வருகிறது. இந்த கிணற்றை விவேகானந்தாகேந்திர பொறுப்பாளர் சரசுவதி தலைமையிலான பசுமை ராமேசுவரம் குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டனர். இதேபோல பாம்பன் குந்துகால் அருகே முகம்மதியார்புரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள சரவண தீர்த்த கிணற்றையும் பார்வையிட்டனர்.

இதுபற்றி விவேகானந்தாகேந்திர பொறுப்பாளர் கூறியதாவது:–

 ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த தீர்த்த கிணறுகளை கண்டுபிடித்து புனரமைப்பு பணிகளை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறோம். ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், வேதாளை வரையில் உள்ள 64 தீர்த்த கிணறுகள் பராமரிப்பில்லாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 30 தீர்த்த கிணறுகளில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டன.

மீதமுள்ள தீர்த்த கிணறுகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தீர்த்தகிணறுகளை சுத்தமாக வைத்திருக்க அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும். தேவ தீர்த்த கிணற்றில் தயவு செய்து குப்பைகளை வீச வேண்டாம். நம்புநாயகி அம்மன் கோவிலில் உள்ள தேவ தீர்த்த கிணறு புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 இவ்வாறு அவர் கூறினார்.


Next Story