மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த சம்பவத்தில் 8 நாட்களாக போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்து வரும் பெண் வார்டன்


மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த சம்பவத்தில் 8 நாட்களாக போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்து வரும் பெண் வார்டன்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:30 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த சம்பவத்தில் தலைமறைவான பெண் வார்டன் கடந்த 8 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் ‘டிமிக்கி’ கொடுத்து வருகிறார். அவரை பிடிக்க பெங்களூரு, கேரளாவில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). தொழில் அதிபரான இவர் கோவை ஹோப் காலேஜ் அருகே உள்ள பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் ‘தர்‌ஷனா’ என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். இங்கு கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளம்பெண்கள் தங்கி இருந்தனர்.

இந்த விடுதியில் பீளமேடு தண்ணீர் பந்தலை சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு தங்கி இருந்த மாணவிகளை தனியார் ஓட்டலுக்கு அழைத்துச்சென்ற புனிதா, அவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுத்து, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் சிலரிடம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி அவர்களை தவறான பாதைக்கு அழைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களின் பெற்றோருக்கு தெரிவிக்க, அவர்கள் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்த னர். அதன்பேரில் போலீசார் கடந்த 23–ந் தேதி ஜெகநாதன், புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையே நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. மேலும் காணாமல் போன புனிதாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே, கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் புனிதாவுக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். அவர் யார்? எதற்காக அவர் புனிதாவுக்கு பணம் கொடுத்தார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தனது கள்ளக்காதலருடன் தலைமறைவாக இருக்கும் புனிதா, அடிக்கடி செல்போனையும், சிம்கார்டுகளையும் மாற்றி, கடந்த 8 நாட்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வருவதால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

அவர் பெங்களூரு மற்றும் கேரள மாநிலம் மூணாறு ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தனிப்படை போலீசார் அந்தப்பகுதிகளில் முகாமிட்டு கர்நாடக, கேரள போலீசாரின் உதவியுடன் புனிதாவை தேடி வருகிறார்கள். இது குறித்து தனிப்படையை சேர்ந்த போலீசார் கூறியதாவது:–

புனிதா கடந்த 23–ந் தேதியில் இருந்து தலைமறைவாக இருக்கிறார். அவருக்கு தொழில் அதிபர் ஒருவர் வங்கி மூலம் ரூ.5 லட்சம் கொடுத்து உள்ளார். அது தொடர்பாக விசாரணை செய்தபோது, அந்த பணத்தில் இருந்து ரூ.26 ஆயிரத்தை புனிதா எடுத்துள்ளது தெரியவந்து உள்ளது. ஆனால் தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

அடிக்கடி இடத்தை மாற்றி வருவதால் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். விரைவில் அவரை பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story