ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Aug 2018 3:30 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டமாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் குளு, குளு காலநிலை நிலவுவதால் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நீலகிரிக்கு வருகின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் வாடகை கார்களை அதிகம் பயன்படுத்தி வந்தனர். தற்போது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதனால் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள வாடகை கார் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் ஊட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலர், சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் கார்கள், வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்கள். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுற்றுலா வாகன டிரைவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். இதையொட்டி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து ஊட்டி பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம் உள்பட பல இடங்களில் கடந்த சில தினங்களாக வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது ஏராளமான மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த வாகனங்களை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த வேண்டிய மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை வாடகைக்கு விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்ததால் சுற்றுலா வாகன டிரைவர்கள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர்.

ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள் குறித்து நீலகிரி சுற்றுலா வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டம் குளிர்ந்த காலநிலை கொண்ட மாவட்டமாக உள்ளது. இங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த பூங்காக்கள், மலைரெயில், அழகிய பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதுதவிர ஊட்டியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆங்கிலேய அதிகாரிகளின் கல்லறைகளும் உள்ளன. இதன்காரணமாக ஆங்கிலேய அதிகாரிகளின் உறவினர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளை காண வருவதோடு, அவர்கள் உருவாக்கிய இடங்களையும் பார்வையிட்டு செல்கின்றனர். ஊட்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை காண பெரும்பாலும் சுற்றுலா வாகனங்களையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களுடைய சொந்தவாகனங்களில் வருவதால் சுற்றுலா தொழில் நலிவடைய தொடங்கி உள்ளது. இதற்கிடையே சிலர் சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள்களை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்கள். இதனால் இந்த தொழிலை நம்பியுள்ளவர்கள் வேலை இழந்து உள்ளனர்.

ஆண்டுதோறும் வாகனங்களின் உதிரிபாகங்கள் மற்றும் பெட்ரோல்– டீசல் விலை, காப்பீடு தொகை உயர்ந்து வருகிறது. இதுதவிர வரிகள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனையும் மீறி அனைத்து வரியினங்களையும் முறையாக செலுத்தி சுற்றுலா தொழிலுக்கு வாகனங்களை இயக்கி வருகிறோம். ஆனால் எந்த வரியும் செலுத்தாமல் சொந்த உபயோகத்துக்கு வைத்திருக்கும் கார்கள், வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அதிகளவு வாடகைக்கு இயக்கப்படுகிறது. இந்த வாகனங்களில் பயணம் செய்யும் போது விபத்துகள் ஏற்பட்டால் பயணிகளுக்கு எந்த இழப்பீடும் கிடைக்காது. இதை அவர்கள் அறிவது இல்லை.

முறையாக காப்பீடு, வரி கட்டி வரும் சுற்றுலா வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும். ஆனால் சொந்த உபயோகத்துக்கு வைத்துள்ள வாகனங்கள் அதிகளவு வாடகைக்கு இயக்கப்படுவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் குடும்பத்தை நிர்வகிக்க முடிய வில்லை. வாகன காப்பீடு உள்ளிட்ட வரிகள் செலுத்த முடியாமல் திணறி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story