வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் கரும்பு விவசாயிகள் சங்கம் முடிவு


வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் கரும்பு விவசாயிகள் சங்கம் முடிவு
x
தினத்தந்தி 1 Aug 2018 4:00 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 7–ந்தேதி வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்துவது என்று கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் தண்டியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராமு, துணைத்தலைவர்கள் சதாசிவம், கணேசன், முத்தையா, தர்மராஜ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிவகங்கை அருகே படமாத்தூரில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலையில் மாநில அரசு பரிந்துரைத்த விலையில் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கித்தொகை ரூ.73 கோடியை உடனே வழங்க வேண்டும். 2018–19–ம் ஆண்டிற்குரிய ரூ.11 கோடி பாக்கியையும் உடனடியாக வழங்க முன்வர வேண்டும். 1966–ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி லாபத்தில் பங்கு தொகை தர வேண்டும் என்கிற உத்தரவை செயல்படுத்த வேண்டும்.

மலும் 1996–ம் ஆண்டு முதல் 2001–ம் ஆண்டு வரை லாபத்தில் பங்கு தொகையை வழங்க கோர்ட்டு உத்தரவிட்ட படி ரூ.20 கோடியை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கரும்பு விவசாயிகள் வாங்கிய கடன்களை ஆலை நிர்வாகம் கடன் தொகையை பிடித்தம் செய்துள்ளது. ஆனால் அந்த தொகையை வங்கிகளுக்கு செலுத்ததால் விவசாயிகள் வரவு–செலவு கணக்கு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே உடனடியாக வங்கிக்கான விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையை உடன் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7–ந்தேதி வீடுகள்தோறும் கருப்பு கொடியேற்றியும், விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story