அணைக்கரை அருகே தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


அணைக்கரை அருகே தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:00 AM IST (Updated: 1 Aug 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கரை அருகே தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையை, மேட்டூர் அணையை போல் தண்ணீரை அதிகளவு தேக்கி வைக்க பயன்படுத்த முடியாது. ஆறுகளுக்கு தண்ணீரை திருப்பி விடுவதற்காக கட்டப்பட்டது தான் கல்லணை. ஆறுகளுக்கு பிரித்து அனுப்பியதுபோக உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

கொள்ளிடம் ஆறு வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. இதை தடுக்க, கும்ப கோணத்தை அடுத்த அணைக்கரையில் உள்ள கீழணையின் அருகே கடலூர்- நாகை மாவட்ட எல்லையான ஆதனூர் குமாரமங்கலம் பகுதியில் ரூ.400 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான நில அளவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அணைக்கரையில் உள்ள கீழணை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 3 லட்சத்து 50 ஆயிரம் கன அடி ஆகும். கடந்த 2005-ம் ஆண்டு கீழணை வழியாக 3 லட்சம் கன அடி தண்ணீர் கடந்து சென்றது. கீழணையின் வடக்கு பிரிவில் 30 கண்மாய்களும், தெற்கு பிரிவில் 40 கண்மாய்களும் உள்ளன.

இந்த கண்மாய்கள் வழியாக வடக்கு ராஜன் வாய்க்கால் மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலமாக தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.

அதேபோல வடவாற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு, அதன் வழியாக வீராணம் ஏரிக்கும் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. 3 மாவட்டங்களுக்கும் பயன்படும் அணையாக அணைக்கரையில் உள்ள கீழணை விளங்குகிறது. இதன் அருகே மற்றுமொரு தடுப்பணை கட்டினால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு குறையும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

முந்தைய கால கட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருந்தது. கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இன்று மழைப்பொழிவு குறைந்து விட்டது. கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை பெறுவதற்கு பல சிக்கல்கள் உள்ளன. எனவே தண்ணீர் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் அதை தேக்கி வைப்பது அவசியம். அதற்கான கட்டமைப்புகளை அரசு புதிதாக உருவாக்க வேண்டும்.

எனவே தான் அணைக்கரையில் உள்ள கீழணை அருகே கடலூர்-நாகை மாவட்ட எல்லையில் ஆதனூர் குமாரமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த பணிகள் விரைவாக முடிந்தால் தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய 3 மாவட்ட மக்களும் பயன் அடைவார்கள்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story