மராத்தா இடஒதுக்கீடு: அரசின் முடிவில் தாமதம் ஏன்? முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்
மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் அரசு முடிவெடுப்பதில் தாமதம் ஏன் என்பதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்தார்.
மும்பை,
மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் அரசு முடிவெடுப்பதில் தாமதம் ஏன் என்பதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்தார்.
மராத்தா இடஒதுக்கீடு
மராத்தா சமுதாயத்தினர் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்த பிரச்சினையில் அரசு நெருக்கடியில் சிக்கி உள்ளது. இடஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் இன்றி அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் மராத்தா பிரச்சினை குறித்து முதல்-மந்திரி பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஐகோர்ட்டு தடை
உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு மட்டும் எந்த முடிவையும் எடுக்க முடியாது. உணர்ச்சிகள் தூண்டப்பட்டால் இந்த சமுதாயத்தில் அமைதி இன்மை ஏற்படும்.
சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடித்தாக வேண்டும். அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க அரசு முயற்சித்து வருகிறது.
பா.ஜனதா அரசு பதவிக்கு வந்து ஓராண்டிற்குள் மராத்தா சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு அந்த சட்டத்தை நிறுத்திவைத்துவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் அதை உறுதி செய்துவிட்டது.
கமிஷன் அமைப்பு
1992-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் ஆணைப்படி மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்படக்கூடாது.
அசாதாரண சூழ்நிலைகளில், மாநில பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் மூலமே இடஒதுக்கீடு விவகாரம் முன்வைக்கப்பட வேண்டும்.
எனவே அதற்காக கமிஷனை அமைத்து ஆய்வு மற்றும் மக்கள் கருத்துக்கேட்பு நடத்த அரசு உத்தரவிட்டது. ஆனால் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையில் கமிஷன் தலைவர் இறந்துவிட்டார். இதையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டு வேலைகள் திரும்ப தொடங்கப்பட்டன.
இந்த கமிஷனின் அறிக்கை வந்தவுடன் நாங்கள் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் சட்டரீதியான தீர்வை கொண்டு வருவோம்.
அவசர சட்டம்
1992-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பின்பற்றவேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. ஒதுக்கீட்டிற்கு பங்கம் விளைவிக்காமல் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
சிலர் அவசர சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றுமாறு கூறுகின்றனர். எங்களால் அப்படி செய்ய முடியும். ஆனால் அந்த சட்டம் கோர்ட்டில் நிற்காது. நாங்கள் மக்களை முட்டாளாக்க வேண்டுமா? அல்லது உண்மையாக இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமா?
இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
Related Tags :
Next Story