கள்ளக்காதலனை பிரித்ததால் இளம்பெண் தற்கொலை பரபரப்பு தகவல்கள்


கள்ளக்காதலனை பிரித்ததால் இளம்பெண் தற்கொலை பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:30 AM IST (Updated: 1 Aug 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனை பிரித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே திக்கணங்கோடு கொல்லாய் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). பொக்லைன் எந்திர டிரைவர். இவருடைய மனைவி வசந்தகுமாரி (30). இவர்களுடைய மகன் அஸ்விந்த் (8), 3-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கேட்டரிங் முடித்துள்ள சுரேஷ்குமார், நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார்.

ராஜேஷ், வசந்தகுமாரியை திருமணம் செய்த பிறகு, வெளிநாட்டிற்கு சென்று சில வருடங்களாக வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் சுரேஷ்குமாருக்கும், வசந்தகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அரசல், புரசலாக வெளிநாட்டில் வேலை பார்த்த ராஜேசுக்கு தெரியவந்தது. இதனால் அவர், வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பி மனைவி, மகனுடன் வசித்தார். மீண்டும் வெளிநாட்டுக்கு செல்லாமல், இங்கேயே பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்தார்.

ராஜேஷின் திடீர் முடிவால் சுரேஷ்குமாரும், வசந்தகுமாரியும் கள்ளக்காதலை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மனைவி வசந்தகுமாரி, கள்ளக்காதலை கைவிட்டு மனம் திருந்தி தன்னுடன் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறார், குழந்தையையும் கவனிக்கிறார் என்று ராஜேஷ் நினைத்திருந்தார். ஆனால் அவருடைய எண்ணத்தை பொய்யாக்கும் வகையில், வசந்தகுமாரி அவ்வப்போது சுரேஷ்குமாருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதற்கிடையே வசந்தகுமாரி, சுரேஷ்குமார் உடனான நெருக்கத்தை அதிகப்படுத்தினார். சுரேஷ்குமார் இல்லாமல், தன்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு வசந்தகுமாரி தள்ளப்பட்டார். கணவர் ராஜேஷ் மற்றும் மகன் அஸ்விந்த் ஆகியோரை மறக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலன் சுரேஷ்குமாருடன் சென்று விட்டார்.

வசந்தகுமாரி திடீரென கள்ளக்காதலனுடன் சென்றதால் ராஜேஷ் அதிர்ச்சி அடைந்தார். சுரேஷ்குமாரின் மனைவியும், தன்னை சுரேஷ்குமார் ஏமாற்றி விட்டதாக நினைத்தார். வீட்டை விட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாமல் இரு வீட்டாரும் திணறினர்.

இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து ராஜேசும், சுரேஷ்குமாரின் மனைவியும் சேர்ந்து முக்கூடல் போலீசார் உதவியுடன் இருவரையும் மடக்கினர். கணவரை பார்த்த வசந்தகுமாரியும், மனைவியை பார்த்த சுரேஷ்குமாரும் அதிர்ச்சி அடைந்தனர். முக்கூடல் போலீசார், கள்ளக்காதல் ஜோடியை குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று காலையில் மகளிர் போலீசார் கள்ளக்காதல் ஜோடிக்கு அறிவுரை கூறினர். அப்போது வசந்தகுமாரி, கள்ளக்காதலன் சுரேஷ்குமாருடன்தான் செல்வேன், கணவருடன் செல்ல மாட்டேன் என விடாப்பிடியாக இருந்தார். எனினும் போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து வசந்தகுமாரி, கணவர் ராஜேசுடன் புறப்பட்டார். மகனின் எதிர்காலம் கருதி, கணவர் ராஜேசும் வசந்தகுமாரியை ஏற்று கொண்டார்.

வீட்டுக்கு வந்த இடத்தில் ராஜேஷ், மனைவி வசந்தகுமாரியிடம் அறிவுரை கூறினார். அப்போது, 2 நாட்கள் கேரளபுரத்தில் உள்ள உன்னுடைய சகோதரர் வீட்டில் தங்கி இரு, பிறகு இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறி அனுப்பி வைத்தார். சகோதரர் வீட்டுக்கு சென்ற அவர் மாலையில் வீட்டை பூட்டிக்கொண்டு திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்தகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்ததை பிரித்ததால் வசந்தகுமாரி தற்கொலை செய்து கொண்டதாக போலீசின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story