குருபரப்பள்ளி அருகே 17 ஆடுகள் மர்மமாக செத்தன


குருபரப்பள்ளி அருகே 17 ஆடுகள் மர்மமாக செத்தன
x
தினத்தந்தி 1 Aug 2018 4:00 AM IST (Updated: 1 Aug 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

குருபரப்பள்ளி அருகே 17 ஆடுகள் மர்மமாக செத்தன.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள எண்ணேகொள்புதூரைச் சேர்ந்தவர் சந்தன் (வயது 40). விவசாயி. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல அவர் அருகில் உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க அழைத்து சென்றார்.

பின்னர் மாலை அவர் ஆடுகளை பட்டிக்கு அழைத்து வந்த போது 4 ஆடுகளை காணவில்லை. இதைத் தொடர்ந்து அவர் வனப்பகுதிக்கு சென்று பார்த்தார். ஆனால் ஆடுகளை காணவில்லை. இதனால் அவர் மீண்டும் ஆடுகளை எண்ணிப் பார்க்க வந்தார். அந்த நேரம் ஆடுகள் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வந்தும், நுரை தள்ளியும் செத்தன. இதை பார்த்த சந்தன் அதிர்ச்சி அடைந்தார்.

இரவுக்குள் மொத்தம் 15 ஆடுகள் செத்தன. இதுகுறித்து அவர் குருபரப்பள்ளி கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து உயிரோடு இருந்த ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். ஆனாலும் நேற்று காலை மேலும் 2 ஆடுகள் செத்தன. இதையடுத்து கால்நடை மருத்துவர் மூலமாக, இறந்த ஆடுகளின் உடலில் இருந்து சில பகுதிகள் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டன.

ஆடுகள் செத்ததற்கான காரணம் குறித்து அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், அந்த ஆடுகள் கொடிய விஷத்தன்மை கொண்ட செடிகளையோ, அல்லது காய்களையோ தின்று செத்திருக்கலாம், அல்லது நெல் நாற்றுக்கு தேக்கிய தண்ணீரை குடித்ததால் ஆடுகள் செத்திருக்கலாம் என தெரிகிறது, என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story