கப்பன் பூங்காவிற்கு வந்த பெண்ணை கற்பழித்த 2 காவலாளிகளுக்கு சாகும் வரை சிறை பெங்களூரு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


கப்பன் பூங்காவிற்கு வந்த பெண்ணை கற்பழித்த 2 காவலாளிகளுக்கு சாகும் வரை சிறை பெங்களூரு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Aug 2018 4:30 AM IST (Updated: 1 Aug 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

கப்பன் பூங்காவிற்கு வந்த பெண்ணை கற்பழித்த 2 காவலாளிகளுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பெங்களூரு,

கப்பன் பூங்காவிற்கு வந்த பெண்ணை கற்பழித்த 2 காவலாளிகளுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கற்பழிப்பு–2 பேர் கைது

துமகூருவை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் 11–ந் தேதி பெங்களூரு கப்பன் பூங்காவில் உள்ள கர்நாடக மாநில டென்னிஸ் சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்காக வந்திருந்தார். அன்றைய தினம் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால் அவர் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு இரவில் புறப்பட்டார். இரவில் அவருக்கு சரியாக வழி தெரியவில்லை.

இந்த நிலையில், கப்பன் பூங்காவில் காவலாளிகளாக இருந்த 2 பேர் அவருக்கு வழி காண்பிப்பதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கப்பன் பூங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பெண்ணை கற்பழித்ததாக காவலாளிகளான அசாமை சேர்ந்த ராஜூ மேதி(வயது 28) மற்றும் போலின் தாஸ்(38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சாகும் வரை...

இதுதொடர்பான வழக்கு பெங்களூரு 53–வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லதா குமாரி தீர்ப்பு வழங்கினார்.

அப்போது, ‘குற்றம்சாட்டப்பட்ட ராஜூ மேதி, போலின் தாஸ் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் 2 பேருக்கும் சாகும் வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசு சார்பிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

--–

(பாக்ஸ்)மனைவியை கொன்று உடலை புதைத்தவரின் ஆயுள் தண்டனை உறுதி

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையை சேர்ந்தவர் தாசப்பா(51). இவர் தனது மனைவி வசந்தம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர், அவருடைய உடலை வீட்டின் உள்ளே குழி தோண்டி புதைத்தார். இந்த நிலையில் வீட்டில் தாய் வசந்தம்மா புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்த அவருடைய மகன், எச்.டி.கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசப்பாவை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2010–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த மைசூரு கோர்ட்டு தாசப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2011–ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆயுள் தண்டனையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தாசப்பா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.


Next Story