வேறொரு வழக்கில் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டு வளாகத்தில் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி
வேறொரு வழக்கில் தன்னை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலந்தூர் கோர்ட்டு வளாகத்தில் கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்,
பெருங்களத்தூரை சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன் (வயது 36) என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிரபாகரனின் காவலை நீட்டிப்பு செய்வதற்காக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை ஆலந்தூர் கோர்ட்டுக்கு வேனில் அழைத்து வந்தனர். அப்போது மடிப்பாக்கம் போலீசார் வேறு ஒரு திருட்டு வழக்கில் பிரபாகரனை கைது செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.
பிளேடால் கழுத்தை அறுத்தார்
இதனை அறிந்த பிரபாகரன் தனக்கும், அந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றும், தன்னை அந்த வழக்கில் கைது செய்யக்கூடாது என்றும் கூறியதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் ஆலந்தூர் கோர்ட்டு வளாகத்திற்கு வேன் வந்தது. வேனில் இருந்து இறங்கிய பிரபாகரன், திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
லேசான காயம் அடைந்த பிரபாகரனை உடனே போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வருகிற 14-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பிரபாகரன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தன்னை மற்றொரு வழக்கில் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபாகரன் தனது கழுத்தை பிளேடால் அறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். அவருக்கு பிளேடு எப்படி கிடைத்தது? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story