ஓட்டேரியில் கடைகளுக்கு போதைப்பொருட்கள் வினியோகம் செய்த 2 பேர் கைது


ஓட்டேரியில் கடைகளுக்கு போதைப்பொருட்கள் வினியோகம் செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2018 4:38 AM IST (Updated: 1 Aug 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டேரியில் ஆட்டோ மூலம் கடைகளுக்கு போதைப்பொருட்களை வினியோகம் செய்த 2 பேரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்து கைது செய்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, மாவா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதனையடுத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை இன்ஸ்பெக்டர் முகம்மதுநாசர் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்மீரா, ஏட்டு சீதாராமன் மற்றும் ஜீப் டிரைவர் அன்பு ஆகியோர் ஓட்டேரி செல்லப்பா தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று போலீசாரை கண்டதும் வேகமாக சென்றது.

2 பேர் கைது

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், விரட்டிச்சென்று ஆட்டோவை மடக்கிப்பிடித்தனர். அந்த ஆட்டோவில் மூட்டை, மூட்டையாக போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் சூளையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 37), வியாசர்பாடியை சேர்ந்த ஆல்பர்ட் (35) என்பது தெரியவந்தது. பிடிபட்ட ஆட்டோவில் 17,425 பாக்கெட் போதைப்பொருட்கள் இருந்தன. பிடிபட்ட இருவரும் சூளையில் உள்ள குடோனில் இருந்து போதைப்பொருட்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஓட்டேரி மற்றும் அதனை சுற்றி உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்து வந்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெகநாதனையும், ஆல்பர்ட்டையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story