குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு  கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:00 AM IST (Updated: 2 Aug 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அரு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள புதுக்கானி, தர்கா பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இதற்கென உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் குறைந்து போனதால், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 3 மாதாங்களாக இதே நிலை நீடித்து வருகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தனர். இருப்பினும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை காலி குடங்குடங்களுடன் பண்ருட்டி–சேலம் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து பேசிய வட்டார வளர்ச்சி அதிகாரி, விரைவில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டனர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த போராட்டத்தால், காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.


Next Story