கீழ்புவனகிரியில் தீயில் கருகி தம்பதி காயம்


கீழ்புவனகிரியில் தீயில் கருகி தம்பதி காயம்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:45 AM IST (Updated: 1 Aug 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

கீழ்புவனகிரியில் தீயில் கருகி தம்பதியினர் காயமடைந்தனர்.

புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள கீழ்புவனகிரியை சேர்ந்தவர் அர்ச்சுனன்(வயது 37), கொத்தனார். இவருடைய மனைவி ராதா(30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அர்ச்சுனன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மண்எண்ணெய் விளக்கின் மேல் கொசுவர்த்தி பற்ற வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த மண்எண்ணெய் விளக்கு சரிந்து கீழே விழுந்ததில், அருகில் படுத்திருந்த ராதாவின் உடையில் கொசுவர்த்தி விழுந்தது. ஏற்கனவே மண்எண்ணெய் கொட்டியிருந்ததால், ராதாவின் சேலையில் தீப்பிடித்தது.

இதில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியதில் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அர்ச்சுனன், தனது மனைவி மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் அவரால் தீயை அணைக்க முடியவில்லை. இதற்கிடையே அர்ச்சுனனுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் விரைந்து வந்து, ராதா மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயமடைந்த கணவன்–மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ராதா மட்டும் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அர்ச்சுனன் சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story