டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு


டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 2 Aug 2018 3:15 AM IST (Updated: 1 Aug 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் முதுநகர்,


கடலூர் முதுநகரில் இருந்து வசந்தராயன்பாளையம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக கோபால்சாமி(வயது 46), விற்பனையாளராக சங்கர்(43) ஆகியோர் இருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் விற்பனை முடிந்ததும், வழக்கம்போல் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மேற்பார்வையாளருக்கும், விற்பனையாளருக்கும் செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்த்தனர். அப்போது கடையில் வைத்திருந்த 3 ஆயிரத்து 800 ரூபாயை காணவில்லை. மேலும் 20 மதுபாட்டில்களையும் காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது.

உடனே இதுபற்றி கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வழக்கமாக இந்த டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் வரை விற்பனை நடைபெறும். நேற்று முன்தினம் விற்பனையான பணம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை கடை ஊழியர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதனால் கொள்ளையர்கள் கடையில் இருந்த சில்லரை பணம் ரூ.3 ஆயிரத்து 800 மற்றும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றுள்ளனர். இதன்காரணமாக விற்பனை பணம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் தப்பியது.


Next Story