கபினி அணையில் செத்து கிடந்த 8 வயது ஆண் புலி மீட்பு பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்


கபினி அணையில் செத்து கிடந்த 8 வயது ஆண் புலி மீட்பு பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:00 AM IST (Updated: 1 Aug 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

கபினி அணையில் செத்து கிடந்த 8 வயது ஆண் புலி மீட்கப்பட்டது. அந்த புலி மின்சாரம் தாக்கி இறந்ததும், அதன் பற்கள், நகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது.

மைசூரு, 

கபினி அணையில் செத்து கிடந்த 8 வயது ஆண் புலி மீட்கப்பட்டது. அந்த புலி மின்சாரம் தாக்கி இறந்ததும், அதன் பற்கள், நகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது என்ற பரபரப்பு தகவல்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அணையில் செத்து கிடந்த புலி

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை உள்ளது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை தனது முழுகொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் புலி ஒன்று அணையில் செத்து கிடந்தது.

இதை பார்த்த பொதுமக்கள் அந்தரசந்தே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து அணையில் செத்து கிடந்த புலியை மீட்டனர். பின்னர் அந்த புலி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அணை அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில்...

இதுபற்றி வனத்துறையினர் கூறியதாவது:-

அணையில் செத்து கிடந்தது 8 வயது நிரம்பிய ஆண் புலி ஆகும். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் புலி, மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்திருப்பதும், அந்த புலியின் பற்கள், நகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே மின்சாரம் தாக்கி இறந்த புலியின் பற்கள், நகங்களை வெட்டி எடுத்துவிட்டு யாரோ விவசாயி, அணை நீரில் புலியின் உடலை வீசியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் தொடர்புடைய நபரை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story