ஆதிவாசி மக்களுக்காக நடமாடும் சுகாதார மையங்கள் சேவை துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்


ஆதிவாசி மக்களுக்காக நடமாடும் சுகாதார மையங்கள் சேவை துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:00 AM IST (Updated: 1 Aug 2018 11:51 PM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி மக்களுக்காக நடமாடும் சுகாதார மையங்களின் சேவையை துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

ஆதிவாசி மக்களுக்காக நடமாடும் சுகாதார மையங்களின் சேவையை துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்.

நடமாடும் சுகாதார மையங்கள்

சமூக நலத்துறை சார்பில் வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்காக நடமாடும் சுகாதார மையங்கள் வாகனங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த சுகாதார மையங்களின் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கலந்துகொண்டு அந்த மையங்களின் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:–

கர்நாடகத்தில் ஆதிவாசி மக்கள் 8 மாவட்டங்களில் வசித்து வருகிறார்கள். இந்த மக்களின் வசதிக்காக முதல் கட்டமாக 8 நடமாடும் சுகாதார மையங்களின் சேவை தொடங்கப்பட்டு இருக்கின்றன. முதல் கட்டமாக குடகு மாவட்டத்தில் சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை, மடிகேரி ஆகிய தாலுகாக்கள், மைசூரு மாவட்டத்தில் பிரியப்பட்டணா, ஹெக்கடதேவனகோட்டே, உன்சூர் தாலுகாக்கள், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொள்ளேகால், எலந்தூர், குண்டலுபேட்டை தாலுகாக்களில் இந்த நடமாடும் சுகாதார மையங்கள் செயல்படும்.

சிவமொக்கா மாவட்டத்தில்...

2–வது கட்டமாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் பண்ட்வால், புத்தூர் தாலுகாக்கள், உடுப்பி மாவட்டத்தில் குந்தாப்புரா, உடுப்பி தாலுகாக்கள், சிக்கமகளூரு மாவட்டத்தில் மூடிகெரே, தரிகெரே தாலுகாக்கள், சிவமொக்கா மாவட்டத்தில் சிகாரிபுரா தாலுகா, உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலியால் தாலுகா ஆகியவற்றில் 16 நடமாடும் சுகாதார மையங்கள் தங்களது சேவையை தொடங்கும். இதன் மூலம் ஆதிவாசி மக்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சையை இந்த மையங்கள் வழங்கும்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே பேசுகையில், “ஒவ்வொரு நடமாடும் சுகாதார மையத்திலும் ஒரு டாக்டர், ஒரு மருந்தாளுநர், ஆய்வக ஊழியர், ஒரு இளநிலை மருத்துவ பெண் உதவியாளர், ஒரு டிரைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு இருக்கும். இந்த நடமாடும் சுகாதார மையம் தினமும் காலையில் ஒரு கிராமம், மதியம் ஒரு கிராமம் என ஒரு நாளைக்கு 2 கிராமங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சையை வழங்கும். நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் அந்த மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும்“ என்றார்.

மதிப்பு ரூ.4 கோடி

நேற்று மொத்தம் 8 நடமாடும் சுகாதார மைய வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். அந்த வாகனங்கள் ஆஸ்பத்திரி வசதிகளுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. அந்த நடமாடும் சுகாதார மைய வாகனங்களில் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப சாதனம், டிஜிட்டல் ஆவண வசதி உள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அந்த மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story