காற்று மாசுபடுவதை தடுக்க பெட்ரோல்–டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டியது அவசியம் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பேட்டி
காற்று மாசுபடுவதை தடுக்க பெட்ரோல்–டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டியது அவசியம் என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
காற்று மாசுபடுவதை தடுக்க பெட்ரோல்–டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டியது அவசியம் என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
காற்று மாசுபாடுதுணை முதல்–மந்திரி பரமேஸ்வரை பெங்களூரு விதான சவுதாவில் லண்டன் நகர துணை மேயர் சிர்லி ரோட்ரிகஸ் மற்றும் அவரது தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்து பேசினர். அவர்கள் காற்று மாசுபாட்டை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின் பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பெங்களூரு நகரம் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. அதே போல் காற்று மாசுபாடும் அதிகரித்துவிட்டது. ஆனால் டெல்லி, மும்பை நகரங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூருவில் காற்று மாசுபடும் அளவு குறைவு தான் என்பது நமக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் ஆகும். காற்று மாசுபாட்டை தடுக்க பெட்ரோல்–டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டியது அவசியம்.
தரமான காற்று கிடைக்கிறதுமின்சார பஸ்கள் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் காற்று மாசுபாடு ஓரளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது. லண்டன் நகரில் மின்சார பஸ்கள் ஓடுகின்றன. அங்கு காற்று மாசுபாடு அடைவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தரமான காற்றும் கிடைக்கிறது. அதே போல் பெங்களூருவையும் மாற்ற வேண்டும். குப்பையை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.
இதற்கு லண்டன் திட்டத்தை இங்கு அமல்படுத்த வேண்டும். பெங்களூருவில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ‘டெண்டர் சூர்‘ திட்டத்தில் சைக்கிளுக்கு தனி பாதை அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. காற்று மாசுபாட்டை தடுப்பது குறித்து லண்டன் மேயருடன் விரிவாக ஆலோசித்தேன். ஏரிகளில் ரசாயன கழிவுகள் கலப்பதால் வெள்ளை நுரை பொங்குகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். நகரின் சில பகுதிகளில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த பெங்களூரு மாநகராட்சி ஒப்புக்கொண்டுள்ளது.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது மேயர் சம்பத்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.