குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
செஞ்சி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
செஞ்சி,
செஞ்சி அருகே ஆலம்பூண்டி காலனியில் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்து போனது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணறுகளுக்கும், பம்பு செட்டுகளுக்கும் சென்று பெரும் சிரமங்களுக்கு இடையே தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
இதற்கிடையே அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, குடிநீர் வழங்க மாற்று நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் தடையின்றி தங்களுக்கு தினந்தோறும் குடிநீர் வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் குலோத்துங்கன் மற்றும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் ரகமத்துல்லா, தனிப்பிரிவு ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் செஞ்சி–திருவண்ணாமலை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.