மலர் கண்காட்சி 4–ந் தேதி தொடங்குகிறது லால்பாக் பூங்காவில் டிக்கெட் கட்டணம் ரூ.10 உயர்வு
மலர் கண்காட்சி வருகிற 4–ந் தேதி தொடங்க உள்ள நிலையில் லால்பாக் பூங்காவில் டிக்கெட் கட்டணம் ரூ.10 உயர்த்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
மலர் கண்காட்சி வருகிற 4–ந் தேதி தொடங்க உள்ள நிலையில் லால்பாக் பூங்காவில் டிக்கெட் கட்டணம் ரூ.10 உயர்த்தப்பட்டு உள்ளது.
மலர் கண்காட்சிபெங்களூரு லால்பாக் பூங்காவில் ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினத்தையொட்டி மலர், பழக்கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். வருகிற 15–ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மலர் மற்றும் பழக்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் லால்பாக் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சி வருகிற 4–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இந்திய ராணுவத்தை பெருமைப்படுத்தும் வகையில் அமைய உள்ளது. பீரங்கி வண்டிகள், ராணுவ விமானங்கள் உள்பட ராணுவ பணியில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவை வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கண்காட்சியில் இடம்பெற உள்ளன. டெல்லியில் உள்ள இந்தியா கேட்டின் அமர் ஜவான் ஜோதி போன்ற வடிவமைப்பு கண்ணாடி மாளிகையின் உள்ளே இடம்பெற உள்ளது. இந்த வடிவமைப்பானது ஆலந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் மலர்கள் உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. இதுதவிர, கன்னட திரைப்படத்துறையை பெருமைப்படுத்தும் வகையில் பெருமை வாய்ந்த கேமராக்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
கட்டண உயர்வுஇந்த நிலையில், மலர் கண்காட்சியை காண செல்பவர்களின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, பெரியவர் ஒருவருக்கு ரூ.60 ஆக இருந்த நுழைவு கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கட்டணம் ரூ.20 ஆகவே உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஜெகதீஷ் மற்றும் லால்பாக் துணை இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.