பெரம்பலூரில் சரக்கு ஆட்டோ டிரைவர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை


பெரம்பலூரில் சரக்கு ஆட்டோ டிரைவர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Aug 2018 4:30 AM IST (Updated: 2 Aug 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் சரக்கு ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். அவரை யாரேனும் கொலை செய்தனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருக்கு திருமணமாகி மலர்கொடி என்கிற மனைவியும், வரதராஜ் (வயது 29) என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். செல்லத்துரை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மகளுக்கு திருமணமாகி விட்டது. திருமணமாகாத வரதராஜ் வி.களத்தூர் பகுதியில் சரக்கு ஆட்டோ ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வரதராஜ் நேற்று முன்தினம் இரவு தனது தாய் மலர்கொடியிடம் லோடுக்கு சென்று வருவதாக என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

ஆனால் வெகுநேரமாகியும் அவர் மீண்டும் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மலர்கொடி, வரதராஜ் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இருந்து வரதராஜ் சிகிச்சை பலனின்றி இறந்திருப்பதாக, அவரது தாய் மலர்கொடிக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மலர்கொடியும், அவரது உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்து வரதராஜின் உடலை பார்த்தனர்.

அப்போது உடலில் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததாக தெரிகிறது. இதனால் வரதராஜின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது தாய் மலர்கொடி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தினர். வரதராஜ் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் தனியார் விடுதி அருகே நின்று கொண்டிருந்தது. அந்த விடுதி அருகே நேற்று அதிகாலை உயிருக்கு போராடி கொண்டிருந்த வரதராஜை யாரோ மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வரதராஜை யாரேனும் கழுத்தை நெறித்து கொலை செய்தனரா? அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதராஜூவுக்கும், அந்த தனியார் விடுதியில் தங்கியிருந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வரதராஜ் எப்படி இறந்தார் என்பது? அவரது உடல் பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story