சீர்காழியில், அ.தி.மு.க. பிரமுகர் படுகொலை: அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்- ம.தி.மு.க. பிரமுகர் கைது


சீர்காழியில், அ.தி.மு.க. பிரமுகர் படுகொலை: அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்- ம.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2018 4:45 AM IST (Updated: 2 Aug 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில், அ.தி.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர், ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல்குவாரி தொடர்பான முன்விரோதத்தில் கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(வயது 47). இவர், கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராகவும், முதல்நிலை ஒப்பந்தக்காரராகவும் இருந்து வந்தார். கடந்த 23-ந் தேதி ரமேஷ்பாபு, சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒப்பந்தக்காரர் ஒருவரை அவரது வீட்டில் சந்தித்து விட்டு வெளியே வந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை படுகொலை செய்தது. இதுகுறித்து ரமேஷ்பாபுவின் தம்பி சீனுவாசன் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 25-ந் தேதி சேலம் கோர்ட்டில் சீர்காழி அருகே புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன்(29), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த பாலு மகன் கட்டைபிரபு என்கிற அருண் பிரபு(34), புதுச்சேரியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மொட்டை என்கிற பிரேம்நாத்(21) ஆகிய 3 பேரும் சரண் அடைந்தனர்.

இதனையடுத்து சரணடைந்த 3 பேரையும் சீர்காழி போலீசார், 5 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. 5 நாள் போலீஸ் காவல் முடிந்து சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சீர்காழி அருகே புதுத்துறை கிராமத்தை சேர்ந்த பார்த்தி பனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நான், டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு செல்போன் உதிரி பாகங்கள் வாங்கி விற்று வந்தேன். அதில் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வந்தேன். பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டதால் திருவெண்காடு, புதுப்பட்டினம், சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால், காஞ்சீபுரம், சேலம், நாமக்கல் போன்ற ஊர்களில் குற்ற வழக்குகளில் சிக்கி ஜெயிலுக்கு சென்று வந்தேன். நான், ஜெயிலில் இருந்தபோது நிறைய தொடர்புகள் கிடைத்தன.

இந்த நிலையில் சீர்காழி தென்பாதி சங்கர் நகரில் வசித்து வந்த ரமேஷ்பாபு, ஒப்பந்த தொழில் உள்ளிட்ட பல தொழில்களை செய்து நல்ல வளர்ச்சியில் இருந்தது எனக்கு தெரிய வந்தது. நான், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ரமேஷ்பாபுவிடம் ரூ.1 லட்சம் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ரமேஷ்பாபு பணம் கொடுக்க மறுத்து தகாத வார்த்தைகளால் என்னை திட்டினார்.

ஆனால், வேறு சில ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டினால் அவர்களுக்கு மட்டும் பணம் கொடுத்து வந்தார். தொடர்ந்து 2 முறை நான் பணம் கேட்டும் கொடுக்க மறுத்து விட்டார். அதனால் ரமேஷ்பாபுவை கொலை செய்தால் நானும் பெரிய ஆளாகிவிடலாம் என நினைத்து கடந்த 8 மாதங்களாக திட்டமிட்டு வந்தேன்.

அப்போது ரமேஷ்பாபுவுக்கு எதிரானவர்கள் யார், யார் என்பதை விசாரித்து தகவல் திரட்ட ஆரம்பித்தேன். அப்போதுதான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீர்காழி தாலுகா குளத்திங்கநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் குலோத்துங்கன் என்பவர் அந்த பகுதியில் உள்ள ஜிம்முக்கு வந்து போனதில் எனக்கு பழக்கமானார். நாங்கள் இருவரும் போனில் பேசிக்கொள்வோம்.

குலோத்துங்கன், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த மீனா என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் 2016-ம் ஆண்டு தேர்தலில் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு தனது மாமியார் மீனா பெயரை பரிந்துரை செய்ததில் தலைமையும் சீட் கொடுக்க முடிவு செய்தது.

அப்போது எடமணல் ரமேஷ்பாபு அவரது செல்வாக்கை பயன்படுத்தி தற்போதைய எம்.எல்.ஏ.வாக உள்ள பாரதிக்கு சீட் வாங்கி கொடுத்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த அவரது மாமியார் தூக்குப்போட்டு இறந்ததாக குலோத்துங்கன் என்னிடம் கூறினார். அப்போது ரமேஷ்பாபு உனக்கும் துரோகம் செய்துள்ளார், தற்போது எனக்கும் விரோதியாகி விட்டார். இதனால் இருவரும் சேர்ந்து ரமேஷ்பாபுவை கொலை செய்துவிடுவோம் என்று கூறினேன்.

அதன்படி குலோத்துங்கனை ரமேஷ்பாபு தம்பி சீனுவாசனிடம் வேலைக்கு சேர சொல்லி, ரமேஷ்பாபுவின் நடமாட்டத்தை பற்றி தகவல் கொடுக்க கூறினேன். அவ்வப்போது குலோத்துங்கன் எனக்கு தகவல் மற்றும் பண உதவி செய்து வந்தார். இந்த நிலையில் கொள்ளிடம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமனுக்கும், ரமேஷ்பாபுவிற்கும் வடரங்கம் மணல் குவாரி சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததும், இதேபோல் சீர்காழியை சேர்ந்த மார்க்கோனிக்கும், ரமேஷ்பாபுவிற்கும் முன்விரோதம் இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் 2 பேரையும், குலோத்துங்கனுடன் சேர்ந்து நேரில் சந்தித்து கூட்டு சதித்திட்டத்தை தீட்டினோம். பின்னர் எனது கூட்டாளிகளான கட்டைபிரபு, பிரேம்நாத், சிலம்பரசன், திருவையாறு குணா, கிருஷ்ணகிரி தமிழ் என்கிற தமிழரசன், எமர்சன் பிரசன்னா ஆகியோரை, ரமேஷ்பாபுவை கொலை செய்ய உதவியாக தயார் நிலையில் வைத்திருந்தேன்.

நானும், கட்டைபிரபுவும் மதுரைக்கு சென்று 3 அரிவாள் மற்றும் இரும்பு கை கோடாரி, கத்தி வாங்கி வைத்திருந்தோம். கட்டைபிரபு நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வைத்திருந்தான். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ரமேஷ்பாபுவை கொலை செய்ய திட்டமிட்டோம். அப்போது முடியாமல் போனது.

எனக்கு ஏற்கனவே பழக்கமான பொறையாறு மருதம்பள்ளத்தில் வசிக்கும் செங்குட்டுவன், தங்கராசு மகன் ராஜாவை சந்தித்தோம். பிறகு ரமேஷ்பாபுவை தீர்த்துகட்ட செங்குட்டுவன் கால்வாய் கொட்டகையில் தங்கியிருந்தோம். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி குலோத்துங்கன் கொடுத்த தகவலின்பேரில் கார், மோட்டார் சைக்கிள்களில் சென்று ரமேஷ்பாபு மீது வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி விட்டோம்.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை வானகிரி அருகே உள்ள ஆற்றில் வீசிவிட்டு. காரை திருக்கடையூரில் விட்டு விட்டு, அங்கிருந்து தனித்தனியாக பிரிந்து சென்று விட்டோம். கடந்த 25-ந் தேதி சேலம் கோர்ட்டில் 3 பேரும் சரணடைந்தோம்.

இவ்வாறு பார்த்திபன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீர்காழி போலீசார், அ.தி.மு.க. கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் (55), சீர்காழியை சேர்ந்த ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் மார்க்கோனி(45) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர்.

பின்னர் அவர்களை, சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி யுவராஜ் முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே கொள்ளிடம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மார்க்கோனி ஆகியோரின் ஆதரவாளர்கள் சீர்காழி போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக திருவையாறு குணா என்கிற குணசேகரன், எமர்சன் பிரசன்னா, சிலம்பரசன், தமிழரசன், சீர்காழி குலோத்துங்கன் ஆகியோரை பிடித்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்கள் 5 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story