‘மாவட்ட கலெக்டரின் கையெழுத்து, தனிநபரின் தலையெழுத்தை மாற்றிவிடும்’ தூத்துக்குடி கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுரை
‘மாவட்ட கலெக்டரின் கையெழுத்து, தனிநபரின் தலையெழுத்தை மாற்றிவிடும்’ தூத்துக்குடி கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுரை தெரிவித்துள்ளனர்.
மதுரை,
மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹரிராகவன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கலவரத்தை தூண்டியதாக ஹரிராகவன் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் கடந்த மாதம் 6–ந்தேதி மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதான வழக்குகளில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் அவருக்கு கடந்த மாதம் 24–ந்தேதி ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் ஹரிராகவன் கடந்த 26–ந்தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து அவரது மனைவி சத்யபாமா, மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டது பற்றி விளக்கம் அளிக்க தூத்துக்குடி கலெக்டர் ஆஜராகும்படி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்று காலையில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு ஆஜரானார்.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி வாதாடும்போது, “மனுதாரரின் கணவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது தொடர்பான ஆவணங்களை கடந்த 20–ந்தேதி மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. 26–ந்தேதி அவர் கையெழுத்து போட்டு உள்ளார்” என்றார்.
இதனையடுத்து நீதிபதிகள், “ஒரு மாவட்ட கலெக்டரின் கையெழுத்து தனிநபரின் தலையெழுத்தை மாற்றிவிடும். இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேவையில்லாமல் பல மாதங்கள் வரை ஜெயிலில் இருக்கும்நிலை ஏற்படும். இது தனிநபரின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல். எனவே எதிர்காலத்தில் உத்தரவுகளை பிறப்பிக்கும் கடைசி நிமிடம் வரை அப்போதைய சூழ்நிலைகளை தெரிந்து முடிவு எடுக்க வேண்டும்” என்று கலெக்டரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர், “வக்கீல் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த ஆட்கொணர்வு மனு முடித்து வைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.