செல்போன் செயலி மூலம் தகவலை திருடி பெண்களின் ஆபாச வீடியோக்கள் வெளிநாடுகளில் விற்பனை, கைதான வாலிபர் அதிர்ச்சி தகவல்
செல்போன் செயலி மூலம் தகவலை திருடி பெண்களின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்ததாக கைதான வாலிபர் விசாரணை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளம் அருகே உள்ள தாமரையூரணி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவரிடம் அவருடைய உறவுக்கார பெண் தனது கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைத்த ஸ்மார்ட் போனில் சில ஆப்களை பதிவிறக்கம் செய்து தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து அந்த செல்போனில் டிராக் வியூவ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார் அதனை தனது செல்போன் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் செய்து வைத்திருந்தாராம். இதையடுத்து அந்த பெண் தனது கணவருடன் பேசும் அனைத்து தகவல்களை தனது லேப்டாப்பில் பதிவு செய்துள்ளார்.
மேலும் சில வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்த தினேஷ்குமார் அதனை வைத்து அந்த பெண்ணிடம் தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் தனது ஆசைக்கு இணங்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளான்.
இதனால் செய்வதறியாது தவித்த அந்த பெண் இதுபற்றி தன்னுடைய சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் கூறிய ஆலோசனைப்படி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அந்த பெண் தினேஷ்குமாருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினாராம். அதனை நம்பிய வாலிபர் தினேஷ்குமார் அங்கு சென்றுள்ளார். அவனை பார்த்ததும் அப்பெண்ணின் சகோதரரும், உறவினர்களும் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். காரணம் உறவு முறையில் அவன் அந்த பெண்ணிற்கு தம்பியாம். பின்னர் அவனை பிடித்து விசாரித்த போது டிராக் வியூவ் ஆப் மூலம் தகவல்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவனது வீட்டிற்கு சென்று சோதனையிட்டபோது அங்கிருந்து 2 லேப்டாப், 3 செல்போன்கள், மற்றும் பெண்கள் அணியும் ஆடைகள் போன்றவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக அவனிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ்குமார் தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்துள்ளார். அப்போது அங்கு படித்த மாணவி ஒருவரின் செல்போனில் இருந்து வீடியோக்களை திருடி அவரை மிரட்டியுள்ளார். அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்ததை தொடர்ந்து அங்கிருந்து அவனை அனுப்பி விட்டனராம். அதன் பிறகு தனது உறவுக்கார பெண்கள், தோழிகள், சகோதரிகள் என அனைவரது ஸ்மார்ட் போனையும் வாங்கி பார்ப்பது போல டிராக் வியூவ் செயலியை பதிவிறக்கம் செய்து அவற்றை தனது செல்போன் மற்றும் மடிக்கணினியின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான்.
இதில் அந்தரங்க காட்சிகளுடன் உள்ள பெண்களை மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்ததும், அதுசமயம் பெண்களின் ஆடைகளை சேகரித்து வீட்டில் வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதவிர ஆசைக்கு இணங்காத பெண்களின் ஆபாச வீடியோக்களை வெளிநாட்டில் உள்ள இணையதளங்களுக்கு விற்பனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவனது ஒரு மடிக்கணினியில் இருந்து மட்டும் 80–க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க காட்சிகளும், ஏராளமான பெண்களின் அந்தரங்க உரையாடல்களையும் பதிவு செய்து வைத்துள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் அவனது உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் துணை சூப்பிரண்டு நடராஜன், தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் சந்த் ஆகியோர் தினேஷ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.