1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 2 Aug 2018 4:15 AM IST (Updated: 2 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பவானிசாகர்,

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வழக்கமாக ஆகஸ்டு 15-ந் தேதி பவானிசாகர் அணை பாசனத்துக்காக திறக்கப்படும். இந்த ஆண்டு முன்னதாக ஆகஸ்டு 1-ந் தேதியே திறக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சாதனையாகும். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் படிப்படியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வரை உயர்த்தப்பட்டு 120 நாட்கள் தொடர்ந்து அதாவது நவம்பர் மாதம் 28-ந் தேதிவரை செல்லும்.

இதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்க உரம் மற்றும் விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. இவற்றை வாங்கி பயன்பெறலாம். தற்போது போதிய அளவு தண்ணீர் இருந்தாலும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் அடுத்த போகத்திற்கும் தண்ணீர் கிடைக்கும்.

2 நாட்களில் தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் பற்றிய ஆய்வு பணி நடந்து வருகிறது. விரைவில் இது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தாளவாடியில் பெய்யும் மழைநீர் வீணாக கர்நாடக அணையில் சென்று கலக்கிறது. இதை தடுத்து தாளவாடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story