பனைக்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் திடீர் தீவிபத்தில் 150 பனை மரங்கள் எரிந்து நாசம்
பனைக்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 150 பனை மரங்கள் எரிந்து நாசமாகின.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடற்கரை அருகே பனைக்குளத்தை சேர்ந்த முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல்ரகீம் என்பவருக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் உள்ளது. புதுக்குடியிருப்பு கடற்கரை அருகே மீனவர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த தீ காற்றின் வேகத்தில் மளமளவென பரவி வயல்வெளிகள், முட்புதர்கள் என கொளுந்து விட்டு எரிந்ததை கண்டதும் அப்பகுதி மீனவர்கள் உடனடியாக நில உரிமையாளரின் உறவினர் ஹம்சத் அலிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு வந்த அவர் இதுபற்றி அழகன்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதபூபதி மற்றும் ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர்.
இவர்களுடன் புதுக்குடியிருப்பு இளைஞர்களும், பொதுமக்களும் சேர்ந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் 150–க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விசாரித்து வருகிறார்.