தூய்மையான தண்ணீரை பெற வனப்பகுதிகளில் நீர் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவது அவசியம்


தூய்மையான தண்ணீரை பெற வனப்பகுதிகளில் நீர் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவது அவசியம்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:00 AM IST (Updated: 2 Aug 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

தூய்மையான தண்ணீரை பெற வனப்பகுதிகளில் நீர் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவது அவசியம் என்று குன்னூர் டேன்டீ மேலாண்மை இயக்குனர் சீனிவாச ரெட்டி பேசினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் ஆண்டுதோறும் வேளாண் பொறியியல் மாணவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் உதவி வன பாதுகாவலர்கள், வனச்சரகர்களுக்கு ‘வனப்பகுதிகளில் நீர்ப்பிரி முகடுப்பகுதி மேலாண்மை’ குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று தொடங்கியது. மையத்தின் தலைவர் கோலா தலைமை தாங்கினார். பயிற்சியில் ஒடிசா, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, சத்தீஷ்கர், கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 41 பேர் கலந்துகொண்டு உள்ளனர். பயிற்சி வருகிற 12–ந் தேதி வரை நடைபெறுகிறது.

12 நாள் நடைபெறும் திறன் மேம்பாட்டு பயிற்சியை குன்னூர் டேன்டீ மேலாண்மை இயக்குனர் சீனிவாச ரெட்டி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வனப்பகுதிகளில் நீர்ப்பிரி முகடுப்பகுதி மேலாண்மையில் இயற்கை வளங்களை பாதுகாக்க அமைக்கப்படும் தடுப்பணைகள், சிறு குட்டைகள் போன்ற கட்டமைப்புகள் மிகவும் செலவு குறைந்ததாகவும், சரியான இடத்தில் கட்டப்பட்டு அதன் மூலம் முழுமையான பலன் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும். அதுபோன்ற கட்டமைப்புகளை கட்டும்போது அந்த பகுதியில் தட்ப வெப்பநிலை, இட அமைப்பு மற்றும் நீரியல் போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் நதிகள், ஆறுகள் வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் உற்பத்தியாவதாலேயே உருவாகின்றன.

தூய்மையான தண்ணீரை பெற வேண்டுமானால் வனப்பகுதிகளில் நீர் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவது மிகவும் அவசியம் ஆகும். அதற்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியின் நோக்கம் உதவி வன பாதுகாவலர்களுக்கு நீர்ப்பிரி முகடுப்பகுதி மேலாண்மை குறித்த அறிவை வளர்ப்பதும், திறமைகளை மேம்படுத்தி வனப்பகுதிகளில் நீர்ப்பிரி மேலாண்மை திட்டத்தை நிறைவேற்றவே ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் உள்ள மாநில வனப்பணியாளர்களுக்கான மத்திய உயர் பயிற்சியக பேராசிரியரும், வன பாதுகாவலருமான இளங்கோ பேசும்போது, மனித வாழ்வில் நீர் மிகவும் இன்றியமையாதது. இந்தியாவில் தற்போது பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் ஒருபுறம் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனால் வரும் காலங்களில் நீரின் தேவை அதிகரிக்கும். நீர் போதுமான அளவு இருந்தால் மட்டுமே உணவு உற்பத்தியை தேவையான அளவு பெருக்க முடியும். இந்த சூழ்நிலையில் வனங்களை பாதுகாப்பது, அவற்றின் மூலம் நீரின் தேவையை பூர்த்தி செய்பவது நமது கடமையாகும். வனப்பகுதிகளில் நேரடி பலன்கள் பல. இயற்கை வளங்களை பாதுகாப்பதில், குறிப்பாக நீர்வளத்தை பாதுகாப்பதில் வனங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, வனப்பகுதிகளையும், அதில் மேற்கொள்ளப்படும் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்தும் தெளிவாக புரிந்துகொள்ள இந்த பயிற்சி ஏதுவாக இருக்கும் என்றார்.

முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் கூறும்போது, காலநிலை மாற்றத்தின் காரணமாக வனப்பகுதிகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் வனப்பகுதிகளை விட்டு வெளியே வருவதால் மனித–விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க வனங்களில் சரியான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி வனப்பகுதிகளின் பசுமையை மீட்டெடுப்பது ஒன்றே தீர்வு ஆகும். பயிற்சி மூலம் அனைத்து விதமான கட்டமைப்புகள், வடிவமைத்தல், அதற்கான மதிப்பீடு தயார் செய்தல், திட்டமிடுதல், சரியான முறையில் செயல்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம் என்றார். முடிவில் கஸ்தூரி திலகம் நன்றி கூறினார்.


Next Story