ஜமீன் வாரிசுகள் என்று போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு
தேனி அருகே வீரபாண்டியில் ஜமீன் வாரிசுகள் என்று போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்தது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி பெரியகுளம் சாலையை சேர்ந்த சேதுமாதவன்செட்டியார் மகன் ராமச்சந்திரன். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு புகார் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வீரபாண்டியில் உள்ள 92 சென்ட் நிலத்தில், 46 சென்ட் நிலத்தை நானும், 46 சென்ட் நிலத்தை எனது சகோதரர் நாகராஜன் என்பவரும் கடந்த 1987-ம் ஆண்டு விலைக்கு வாங்கினோம். இந்த நிலத்தை அபகரிக்க வேண்டும் என்று அரண்மனைப்புதூரை சேர்ந்த ராஜவேல்பாண்டியன் மகன்கள் விஜயராஜன், ராமர், தர்மராஜ் மனைவி தனலட்சுமி, சாமித்துரை மனைவி கணேஷ்வரி, சுந்தரவடிவேல் மனைவி ஜெயலட்சுமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ, சூர்யலட்சுமி, கோகிலவாணி, கதிர்வேல்பாண்டியன் ஆகியோர் கூட்டு சதி செய்து தங்களை கண்டமனூர் ஜமீனின் வாரிசுகள் எனக் கூறிக் கொண்டு போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.
இதில், விஜயராஜன், ராமர் ஆகிய 2 பேருக்கும் மற்ற அனைவரும் பொது அதிகாரம் கொடுப்பது போல் போலி ஆவணம் தயாரித் துள்ளனர். இந்த நிலத்தை ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டியை சேர்ந்த தங்கையா என்பவருக்கு விற்பனை செய்வது போல் மற்றொரு போலியான ஆவணத்தை தயாரித்து தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து நிலத்தை அபகரிக்க முயன்றனர்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் நிலம் அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் விசாரணை நடத்தி, விஜயராஜன், ராமர், தனலட்சுமி உள்பட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story