பாலம் வேலை தாமதம்– குறுகலான பாதை: மரண சாலைக்கு விடிவு கிடைக்குமா?


பாலம் வேலை தாமதம்– குறுகலான பாதை: மரண சாலைக்கு விடிவு கிடைக்குமா?
x
தினத்தந்தி 2 Aug 2018 4:00 AM IST (Updated: 2 Aug 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

கோவை– பொள்ளாச்சி ரோட்டில் விபத்துகளால் நாளுக்குநாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மரண சாலையாக மாறிவிட்ட இதற்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோவை,

கோவை– பொள்ளாச்சி சாலை மிகவும் குறுகலாக உள்ளது. தற்போது ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்காக ரூ.500 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொள்ளாச்சி– ஆச்சிப்பட்டி வரையிலான பணிகள் முடிவு பெற்றுள்ளன.

ஈச்சனாரி முதல் ஆச்சிப்பட்டிவரை 4 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக மேம்பாலம் மற்றும் தரைப்பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. இதுதவிர ஒரு வழிப்பாதை வழியாகவும் வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன. மேம்பால பணிகள் தாமதம் ஆவதால் கோவை ஈச்சனாரி பகுதியில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 6 பேர் பலியாகினர். இந்த பயங்கர விபத்து நடைபெற்ற சுந்தராபுரம் பகுதியில் சாலை குறுகலான பாதையாக உள்ளது. இதில் சாலைக்கு நடுவில் தடுப்பு அமைக்கப்பட்டு இருவழி போக்குவரத்து நடைபெற்றாலும் அகலம் குறைவினால் வாகனங்கள் உரசியபடியே செல்கிறது. சாலை ஓரத்தில் நடந்து செல்பவர்கள், பஸ்சுக்காக காத்து நிற்பவர்கள் உயிரை கையில் பிடித்தபடி செல்ல வேண்டியது உள்ளது.

சுந்தராபுரம் பகுதியில் சாலையை விரிவுபடுத்துவதுடன், கோவை– பொள்ளாச்சி 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story