கீரமங்கலம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன


கீரமங்கலம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 2 Aug 2018 4:30 AM IST (Updated: 2 Aug 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதையடுத்து தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், பனங்குளம், மாங்காடு, அணவயல் மற்றும் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை சூறை காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றில் இந்தபகுதிகளில் மா, பலா, தென்னை, தேக்கு போன்ற பலவகையான 200-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மேலும் மரங்கள் சாய்ந்ததால் அருகில் உள்ள மின்கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. அதேபோல சேந்தன்குடியில் பழனியப்பன் என்பவரின் வீட்டில் மரம் விழுந்து வீடு சேதமடைந்தது. மேலும் அதேஊரில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் நிறுத்துமிடம் காற்றில் சேதடைந்தது. மேலும் மாங்காடு சாளுவன் குடியிருப்பில் ராஜா என்பவரின் ஓட்டு வீட்டின் அருகில் இருந்த வேம்பு மரக்கிளை ஒடிந்து விழுந்து ஓடுகள் சேதமடைந்தது.

சூறைக்காற்று வீசியதில் மரங்கள் அருகில் உள்ள மின்கம்பங்களில் சாய்ந்ததால் கீரமங்கலம் துணைமின் நிலையத்தின் பராமரிப்பில் உள்ள கீரமங்கலம், செரியலூர் மற்றும் சில கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. அதேபோல கொத்தமங்கலம் துணைமின் நிலையத்தின் பராமரிப்பில் உள்ள கொத்தமங்கலம், மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், வடகாடு, கறம்பக்காடு, கைகாட்டி, ஆகிய ஊர்களில் 64 மின்கம்பங்களும், காசிம்புதுப்பேட்டை வழியாக தஞ்சாவூருக்கு செல்லும் உயர்மின்னழுத்த கோபுரமும் சாய்ந்தன. இதனால் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்களும், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களும் தீவிரமாக உள்ளனர். மின்சாரம் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடக்க மின்வாரியத்தில் இருந்து கூடுதல் பணியாளர்களை அனுப்பினால் சீரமைப்பு விரைந்து முடிக்கப்படலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் சூறைக்காற்றில் சேதடைந்த வீடுகள், மற்றும் மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story