சிவகங்கையில் வாடகை தராத கடைகள் பூட்டி சீல்வைப்பு, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


சிவகங்கையில் வாடகை தராத கடைகள் பூட்டி சீல்வைப்பு, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Aug 2018 4:00 AM IST (Updated: 2 Aug 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை தராத கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல்வைத்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை நகராட்சி மூலமாக நகரில் பல இடங்களில் கடைகள் வாடகைக்கு விட்டுள்ளனர். இதில் சிவகங்கை பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் வாடகைக்கு எடுத்தவர்கள் மாதந்தோறும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை செலுத்தவில்லை. அதில் சிலர் கடந்த 2014–ம் ஆண்டு முதல் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. இதனால் பாக்கி தொகை செலுத்தாத 8 கடைகளை ஆணையாளர் அயூப்கான் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைக்க முயன்றனர்.

அப்போது இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வரும் ஒருவர் கடையைவிட்டு வெளியேற மறுத்து கடைக்குள் அமர்ந்து கொண்டார். இதனால் அதிகாரிகள் கடையை பூட்ட முடியாமல் தவித்தனர். இதேபோல் மற்ற கடைகாரர்களும் அதிகாரிகளிடம் வெளியே மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடரந்து சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையில் போலீசார் அங்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல்வைத்தனர்.

இதுதொடர்பாக சீல் வைக்கப்பட்ட வாடகை கடைகாரர்கள் கூறும்போது, நாங்கள் நகராட்சிக்கு உரிய முறையில் தான் வாடகை செலுத்தி வந்தோம். ஆனால் எங்களுக்கு திடீரென்று வாடகையை உயர்த்திவிட்டதாக அறிவிப்பு கொடுத்தனர். அதில் ஏற்கனவே கொடுத்த வாடகையைவிட பல மடங்கு வாடகையை உயர்த்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதற்குள் அதிகாரிகள் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். அன்றாடம் தொழில் செய்து நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். இந்தநிலையில் இதுபோன்று அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்றனர்.


Next Story