சட்டசபையில் நடைபெறும் வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை


சட்டசபையில் நடைபெறும் வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை
x
தினத்தந்தி 2 Aug 2018 5:00 AM IST (Updated: 2 Aug 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

எந்த ஒரு வாக்கெடுப்பிலும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை நிகழ்ச்சியில் நேற்று முதன்முதலாக நியமன எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து பேசினார். அவர் பேசியதாவது:–

புதுச்சேரி சட்டபேரவையையும் அல்லது அமைச்சரவையையும் அல்லது புதுச்சேரி முதல்–அமைச்சரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் வெளியிட்ட 23.6.2017 தேதியிட்ட அறிவிக்கையின்படி மத்திய அரசு புதுச்சேரி சட்டசபைக்கு நியமனம் செய்வதாக 3 நியமன நபர்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை போதுமான விவரங்கள் இல்லாமல் அறிவிக்கை வெளியிட்டது.

இதுதொடர்பான நிலுவையில் உள்ள வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 19–ந்தேதியிட்ட உத்தரவில், புதுவை சட்டபேரவை தலைவரும் (சபாநாயகர்) சட்டப்பேரவையும் நியமனம் செய்யப்பட்ட 3 நபர்களையும் சட்டப்பேரவைக்குள் அனுமதிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியதற்கிணங்க நிலுவையில் உள்ள வாக்குகளுக்கு எந்த குந்தகமும் ஏற்படாத வகையில் இந்த சட்டசபையில் அவர்களை அனுமதித்துள்ளீர்கள்.

ஆனால் மத்தியில் ஆளும் கட்சி சுயநலத்துக்காக எப்படியேனும் பெரும்பான்மை மக்களின் முடிவுக்கும், மக்களின் எண்ணங்களுக்கும் விரோதமாக இருந்தாலும் இந்திய ஆட்சி பகுதி முழுவதும் எந்த வழியிலாவது ஆள வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில் செயல்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.

நியமன எம்.எல்.ஏ.க்களில் புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதால் பெரும்பான்மை மக்கள் ஆட்சி மாண்பை காக்கும்பொருட்டும், சுப்ரீம் கோர்ட்டின் மாண்பினை காக்கும் பொருட்டும் செயல்பட வேண்டும். எனவே ஜனாதிபதி தேர்தலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 55–ன்கீழ் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் வாக்குரிமை இல்லாத காரணத்தினாலும் 3 நியமன நபர்களுக்கும் இந்த சட்டசபையில் எந்த ஒரு வாக்கெடுப்பிலும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேற்சொன்ன 3 நியமன நபர்களை சுப்ரீம் கோர்ட்டின் எதிர்பார்ப்பிற்கிணங்க மட்டுமே சட்டசபை அனுமதிக்கிறதே தவிர வேறு எந்த உத்தரவின்படியோ அல்லது அறிவிக்கையின்படியோ இப்பேரவை அனுமதிக்கவில்லை என்பதையும் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அனந்தராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

அதைத்தொடர்ந்து இந்த தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர் வைத்திலிங்கம் தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்தார்.

அப்போது எழுந்த நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான என்.எஸ்.ஜே.ஜெயபால் ஆகியோரும் தீர்மானத்தை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அதை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக கூறினார்கள். ஆனால் அந்த நேரத்தில் சபையை சபாநாயகர் வைத்திலிங்கம் காலவரையின்றி ஒத்திவைத்தார்.


Next Story