நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதித்து ஏன்? சபாநாயகர் வைத்திலிங்கம் விளக்கம்
நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்தில் கலந்துகொள்ள அனுமதித்து ஏன்? என்பதற்கு சபாநாயகர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நேற்று சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
புதுவை சட்டசபை நேற்று கூடியதும் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. எழுந்து, புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்த 3 பேரையும் அனுமதிக்கக்கூடாது என்று சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தேன். அதன் மேல் எடுத்த நடவடிக்கை என்ன? என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சபாநாயகர் வைத்திலிங்கம், சுப்ரீம் கோர்ட்டின் எதிர்பார்ப்புக்கு இணங்க பேரவை கூட்டத்தில் 3 பேரும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. வருகிற 11.9.2018 அன்று வழக்கின் மறு விசாரணை வருகிறது. அதுவரை இந்த அனுமதி பொருந்தும். அதன்பின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.