சட்டசபை கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு, நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றம்


சட்டசபை கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு, நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றம்
x
தினத்தந்தி 2 Aug 2018 5:00 AM IST (Updated: 2 Aug 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபை கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி மத்திய அரசு நியமித்தது. இதற்கான உத்தரவு ஜூலை 3-ந்தேதி புதுவை அரசுக்கு கிடைத்தது.

ஆனால் உரிய அதிகாரம் பெற்றவரிடமிருந்து இந்த தகவல் சட்டமன்ற செயலகத்துக்கு வரவில்லை என்று கூறி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்தார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஜூலை 4-ந்தேதி இரவோடு இரவாக கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய அரசின் இந்த நியமனத்துக்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் தனலட்சுமி ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் அவர்களது நியமனம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு பிறகும் அவர்களை சபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார். ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடைகேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. அப்போதும் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த விசாரணையின்போது, 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிப்பார் என்று எதிர்பார்ப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தில் நிதி ஒதுக்க மசோதாவை நிறைவேற்ற நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கவர்னர் கிரண்பெடி அனுமதி கொடுத்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, கவர்னர் கிரண்பெடியின் நெருக்கடி காரணமாக புதுவை அரசு தனது நிலையில் இருந்து இறங்கி வந்தது. நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க முடிவு எடுத்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது.

இதன்படி நேற்று காலை 9.05 மணி அளவில் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் ஒரே காரில் சட்டசபைக்கு வந்தனர். கையில் தாமரை பூவுடன் வந்த அவர்கள் சட்டமன்ற படிக்கட்டுகளை தொட்டு வணங்கினார்கள்.

பின்னர் நேரடியாக சபாநாயகரின் அறைக்கு வந்த அவர்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கிற்குள் வந்தனர்.

அவர்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அங்கு சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் அமர்ந்தனர். காலை 9.30 மணிக்கு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிதி ஒதுக்க மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Next Story