எதிரிக்கு எதிரி நண்பனாக 14 பேர் கூட்டு சேர்ந்து சதி: புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கொலையில் தொழில் போட்டி காரணமாக எதிரிக்கு எதிரி நண்பனாக 14 பேர் கூட்டு சேர்ந்து கொலை செய்ததாக கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வானூர்,
புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் என்ற ரவி (வயது 42). புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராகவும், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநில துணைத்தலைவராகவும் இருந்து வந்தார். காலாப்பட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தார்.
கடந்த 30–ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் ஜோசப் தனது வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். ஆரோவில் அருகே சென்ற அவரை பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் திடீரென முந்திக் கொண்டு வந்து அரிவாளால் ஜோசப்பை வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.
புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடிவந்தனர்.
இந்த பயங்கர கொலை குறித்து ஜோசப்பின் தம்பி ராஜுவிடம் விசாரித்ததில் போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணிகளை எடுப்பது தொடர்பான பிரச்சினையில் ஜோசப் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகர்களான பெரிய காலாப்பட்டை சேர்ந்த சந்திரசேகர், பார்த்திபன், பிள்ளைச்சாவடி முகுந்தராஜ், விசுவநாதன், ஆனந்த மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் செல்வகுமார், குமரேசன் ஆகியோர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.
இதில் சந்திரசேகர், செல்வகுமார், ஆனந்த், குமரேசன், பார்த்திபன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடிவந்தனர். இதையொட்டி நேற்று மோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஜோசப்பை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:–
காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக வந்த புகாரை அடுத்து அங்கு சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தினார். இதனையடுத்து தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீரை அந்த நிறுவனம் விலைக்கு வாங்கி பயன்படுத்தியது. இதற்கான ஒப்பந்தத்தை பெரிய காலாப்பட்டை சேர்ந்த சந்திரசேகர் எடுத்து தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.
இந்த்நிலையில் திடீரென்று அந்த ஒப்பந்தத்தை தனியார் தொழிற்சாலை நிர்வாகம் ரத்து செய்தது. இதற்கு ஜோசப் தான் காரணம் என்று சந்திரசேகர் கருதினார். இதனால் அவருக்கு ஜோசப் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
ஏற்கனவே பார்த்திபன், செல்வகுமார் உள்பட பலருக்கு தொழில் போட்டி காரணமாக ஜோசப் மீது விரோதம் இருந்து வந்தது. இதனால் ஜோசப்புக்கு தொழில் ரீதியாக பிரச்சினை கொடுத்தனர். இதுகுறித்து ஜோசப்புக்கும் தெரியவந்துள்ளது. போலீசாரும் அவரை எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் அவர்களுடன் புதிய எதிரியான சந்திரசேகரும் சேர்ந்து கொண்டார். மொத்தம் 14 பேர் கூட்டு சேர்ந்து ஜோசப்பை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள்.
இதை நிறைவேற்ற கூலிப்படை வைப்பது என முடிவு செய்தனர். இதற்காக 14 பேரும் குறிப்பிட்ட தொகையை சேர்த்து புதுச்சேரியை சேர்ந்த 4 பேரை தேர்ந்தெடுத்தனர். அவர்களிடம் ரூ.50 லட்சம் தருவதாக பேசி ஜோசப்பை கொலை செய்வது குறித்து சதி திட்டம் வகுத்தனர்.
அதன்படி ஜோசப்பை அந்த கும்பல் கண்காணித்து வந்துள்ளது. கடந்த 30–ந்தேதி காலாப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு ஜோசப் ஸ்கூட்டரில் புறப்பட்டு வந்ததை பார்த்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூலிப்படையினர் அவரது பின்னால் மோட்டார் சைக்கிள்களில் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்திரசேகர், செல்வகுமார், ஆனந்த், குமரேசன், பார்த்திபன் மற்றும் மோகன் ஆகியோரை போலீசார் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந் 4 பேர் மற்றும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.